

திருநெல்வேலி மாவட்டத்தில் அணைகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். சொட்டுத் தண்ணீர் கூட இல்லாமல் கடனா அணை வறண்டுள்ளதால், அதை நம்பி 3 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர் கருகும் அபாயம் உள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் வளமையான மழையளவு 814.80 மி.மீ. கடந்த ஆண்டு இயல்பான மழையளவைவிட 62 சதவீதம் அதிகமாக 1,320 மி.மீ. மழை பெறப்பட்டிருந்தது. இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் வரையில் இயல்பான மழையளவு 298.8 மி.மீ. அதிலும் 9 சதவீதம் அதிகமாக 325.29 மி.மீ. மழை பெறப்பட்டுள்ளதாக வேளாண்மைத்துறையின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டில் ஆகஸ்ட் மாதத்தில் 52.52 மி.மீ. மழை பெய்திருக்கிறது. ஆனால் இவ்வாண்டு ஆகஸ்ட் மாதத்தில் 19.67 மி.மீ. மழை மட்டுமே பெய்திருக்கிறது.
மாவட்டத்தில் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு, கடனா, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, அடவிநயினார், வடக்குபச்சையாறு, கொடுமுடியாறு, நம்பியாறு ஆகிய 11 அணைகளின் மொத்த கொள்ளளவு 13,765.5 மில்லியன் கனஅடியாகும். தற்போது 3,363.7 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டுமே இருக்கிறது. இது 24.5 சதவீத நீர் இருப்பாகும்.
நீர் வரத்து இல்லை
கடனா அணையின் அதிகபட்ச நீர்மட்டம் 85 அடியாகும். தற்போது 25 கனஅடி தண்ணீர் உள்ளதாக வேளாண்மைத்துறை கணக்கிட்டிருக்கிறது. ஆனால், தற்போது சிறு குட்டை அளவுக்குக்கூட தண்ணீர் இல்லாமல் அணை வறண்டிருக்கிறது. அணைக்கு மேல் மலையில் இருந்து ஓடி வரும் கடனா ஆறும் வறண்டிருக்கிறது. நீர்வரத்து சுத்தமாக இல்லாததால் கடந்த 5 நாட்களுக்குமுன் அணை மூடப்பட்டிருந்தது.
3 ஆயிரம் ஏக்கர்
தற்போது இந்த அணைப்பாசனத்துக்கு உட்பட்ட 3 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர்களுக்கு தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது. சில இடங்களில் பொதி பருவத்தையும், சில இடங்களில் கதிர் வரும் பருவத்தையும் நெற்பயிர்கள் எட்டியிருக்கின்றன. இதனால் இன்னும் 20 முதல் 30 நாட்களுக்கு தண்ணீர் தேவையிருக்கிறது. அணை மூடப்பட்டுள்ள நிலையில் பயிர்களுக்கு எவ்வாறு தண்ணீர் பாய்ச்சுவது? என்ற கவலையில் விவசாயிகள் இருக்கிறார்கள்.
மழை பெய்யுமா?
மழை பெய்தால் அணையில் நீர்மட்டம் உயர்ந்துவிடும். அதன்பின் தண்ணீர் திறக்கப்பட்டால் பயிர்களுக்கு தண்ணீர் கிடைத்துவிடும் என்று அவர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள்.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருநெல்வேலி மாவட்டச் செயலாளர் கசமுத்து கூறும்போது, “மழை பெய்தால்தான் பயிர்களை காப்பாற்ற முடியும் என்ற நிலைக்கு விவசாயிகள் தள்ளப் பட்டிருக்கிறார்கள். வசதிபடைத்த விவசாயிகள் கிணறுகளில் இருந்து தண்ணீரை மோட்டார்கள் மூலம் பாய்ச்சுகிறார்கள். மற்ற விவசாயிகள் என்ன செய்ய முடியும்? ஓரளவுக்கு மழைபெய்தால் அணைக்கு நீர்வரத்து இருக்கும். தற்போது பயிர்கள் கருகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது’ என்றார் அவர்.
வறண்டன குளங்கள்
மாவட்டத்தில் மொத்தமுள்ள 921 கால்வரத்து குளங்கள், 1,528 மானா வாரி குளங்களில், 693 கால்வரத்து குளங்களும், 1,098 மானாவாரி குளங்களும் வறண்டிருக்கின்றன.