

விதவிதமான ஆடைகள், பலதரப்பட்ட மக்களுடன் கலந்துரையாடல் என பிரதமர் நரேந்திர மோடி பாணியில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டுள்ள பிரச்சாரம், சட்டப்பேரவைத் தேர்தலில் அவருக்கு கைகொடுக்கும் என உற்சாகமாக கூறுகின்றனர் திமுகவினர்.
திமுகவின் அடுத்தகட்ட தலைவராக முன்னிறுத்தப்படும் ஸ்டாலின், ‘நமக்கு நாமே - விடியல் மீட்புப் பயணம்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு பயணத்தை அறிவித்திருந்தார். அதன்படி, முதல்கட்ட பயணத்தை கடந்த 20-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார். மாவட்டந்தோறும் சென்று மக்களை சந்தித்து வருகிறார்.
கடந்த மக்களவைத் தேர்தலின் போது பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நரேந்திர மோடி, விதவிதமான ஆடைகளுடன் நாடெங்கும் பொதுக்கூட்டங்களில் பேசினார். அந்தந்த மாநிலத்துக்கு ஏற்றவாறு ஆடைகளை அணிந்து மக்களை கவர்ந்தார். சென்னை பொதுக்கூட்டத்தில் தமிழகத்தின் பாரம்பரிய ஆடையான வேட்டி அணிந்து கொண்டு பேசினார். நேரடி கலந்துரையாடல், காணொலி காட்சிகள் மூலம் தொழிலதிபர்கள் முதல் தேநீர் கடைகாரர்கள் வரை அனைவரிடமும் பேசினார்.
அதே பாணியில் ஸ்டாலினும் தற்போது பிரச்சாரம் செய்து வருகிறார். குடும்ப நிகழ்ச்சிகள் தவிர்த்து எப்போதும் வெள்ளை வேட்டி, சட்டையுடன் வலம் வரும் அவர், முதல்முறையாக விதவித மான ஆடைகளுடன் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்.தினமும் அதிகாலையிலேயே பயணத்தை தொடங்கும் அவர், நடைபயிற்சி செல்பவர்கள், விவசாயத் தொழிலா ளர்கள், மாணவ, மாணவிகள், மகளிர் சுயஉதவிக் குழுவினர், முஸ்லிம் ஜமாஅத், கிறிஸ்தவ தேவாலய குழுவினர், மீனவர்கள் என பல்வேறு தரப்பினரை சந்திக்கிறார். பொதுமக்களுடன் தரையில் அமர்ந்தும், உணவருந்திய படியும் பேசுகிறார்.
ஸ்டாலினின் இந்தப் பயணத்தை அவரது மருமகன் சபரீசன், இளை ஞரணி துணை அமைப்பாளர் மகேஷ் பொய்யாமொழி தலைமை யிலான குழுவினர் திட்டமிடுகின்றனர். இவர்களின் ஆலோசனைப்படி திமுக நிர்வாகிகள் பயணத்துக்கான ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.
இதற்காக தகவல் தொழில்நுட்ப குழு ஒன்று இயங்கி வருகிறது. பிரதமர் மோடியின் ஆலோசனைக் குழுவில் இருந்த பொறியாளர்கள் சிலர் இவர்களுக்கும் ஆலோசனை வழங்கி வருவதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக ஸ்டாலின் தகவல் தொழில்நுட்ப குழுவில் உள்ள பொறியாளர் ஒருவரிடம் கேட்டபோது, ''எந்த இடத்தில், யாருடன் என்ன பேச வேண்டும் என்பதற்கான புள்ளிவிவரங்களை சேகரித்துத் தருகிறோம். கட்சியினர், பொதுமக்களுடன் பேசி அவர்களின் பிரச்சினைகளை, கோரிக்கைகளை முன்கூட்டியே அளித்து விடுகிறோம். ஒவ்வொரு நொடியும் அவரது நிகழ்ச்சிகளை துல்லியமாக பதிவு செய்து முகநூல், டிவிட்டர், இணைய தளம், வைபர், யூ-டியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலம் வெளி யிடுகிறோம்'' என்றார்.
சாலை யோர தேநீர் கடைகளில் தேநீர் அருந்துவதை வழக்கமாகக் கொண்டுள்ள ஸ்டாலினை அப்பகுதி மக்கள் மட்டுமல்ல திமுகவினரும் ஆச்சரியமாகப் பார்க்கின்றனர். ஸ்டாலின் இந்த புதுமையான பிரச்சாரத்தை எதிர்க்கட்சிகள் கேலியும், கிண்டலுமாக விமர்சித் தாலும் மக்களிடம் கிடைத்துள்ள வரவேற்பைப் பார்த்து திமுகவினர் உற்சாகமடைந்துள்ளனர்.