Published : 28 Sep 2020 09:43 PM
Last Updated : 28 Sep 2020 09:43 PM

உதவி ஆணையர் பதவி உயர்வு பெற்ற நிலையில் கரோனா தொற்றால் உயிரிழந்த போக்குவரத்து ஆய்வாளர்: டிஜிபி, காவல் உயர் அதிகாரிகள் அஞ்சலி

சென்னை

உதவி ஆணையர் பதவி உயர்வு வந்த நிலையில் பதவி ஏற்கும் முன்னரே, கரோனா தொற்று பாதிப்பால் நீலாங்கரை போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் புருஷோத்தமன் நேற்று உயிரிழந்தார். அவரது திருவுருவப் படத்திற்கு டிஜிபி திரிபாதி, காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மலரஞ்சலி செலுத்தினர்.

கரோனா தொற்று சென்னையில் பரவ ஆரம்பித்ததும் அதில் அதிகம் பாதிக்கப்பட்டதில் முன் களப்பணியாளர்களான காவல் துறையினரும் அடங்குவர். மாம்பலம் காவல் ஆய்வாளர் முரளி உள்ளிட்ட பல காவல் உதவி ஆய்வாளர்கள், தலைமைக் காவலர்கள் கரோனா தொற்றால் பலியானார்கள். ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

சென்னை பெருநகர காவல்துறையின், நீலாங்கரை போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் புருஷோத்தமன் பணியின்போது கரோனா பாதிப்படைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். அவர் சிகிச்சையில் இருந்த நேரத்தில் அவருக்கு உதவி ஆணையர் பதவி உயர்வு அறிவிக்கப்பட்டது. சிகிச்சை முடிந்து வந்து உதவி ஆணையராகப் பதவி உயர்வை ஏற்க இருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

மறைந்த காவல் ஆய்வாளர் புருஷோத்தமனுக்கு செல்வி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். மரணமடைந்த புருஷோத்தமனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது உருவப்படத்துக்கு தமிழக காவல்துறை சட்டம் ஒழுங்கு டிஜிபி திரிபாதி, மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால், மற்றும் கூடுதல் ஆணையர்கள் தினகரன் (தெற்கு), அருண் (வடக்கு), கண்ணன் (போக்குவரத்து), இணை ஆணையர்கள் ஏஜி பாபு (தெற்கு), லட்சுமி (போக்குவரத்து) (தெற்கு), துணை ஆணையர்கள், காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் அஞ்சலி செலுத்தினர்.

நீலாங்கரை போக்குவரத்து காவல் நிலைய வளாகத்தில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில், மறைந்த காவல் ஆய்வாளர் புருஷோத்தமனின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் அனைவரும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x