

பணத்துக்கு ஆசைப்பட்டு செம்மர கடத்தல்காரர்களின் வலையில் சிக்கிவிட வேண்டாம் என்று மரம் வெட்டும் கூலி தொழிலாளிகளை ஆந்திர டிஜிபி அறிவுறுத்தியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளது எளாவூர். ஆந்திர எல்லையை ஒட்டிள்ள இங்கு தமிழக அரசு சார்பில், ரூ.105 கோடி மதிப்பீட்டில் நவீன ஒருங்கிணைந்த சோதனை சாவடி அமைக்கும் பணி நடந்து வருகிறது.
ஆந்திர மாநிலம் வழியாக தமிழகத்துக்கு வரும் கனரக வாகனங்களை சோதனை செய்ய 10 வழித் தடங்கள், தமிழகத்திலிருந்து ஆந்திர பகுதிக்கு செல்லும் வாகனங்களை சோதனை செய்ய 6 வழித் தடங்கள் மற்றும் வாகனத்தில் உள்ள பொருட்கள் மற்றும் அதன் எடையை அறிய வும் ஸ்கேனிங், எடை மேடை, கணினி வசதி உள்ளிட்ட நவீன வசதிகளுடன் இந்த சோதனை சாவடி அமைக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து, காவல், வரு வாய், வணிகவரி உள்ளிட்ட துறைகளின் அலுவலகங்களும் இங்கு அமைக்கப்படவுள்ளன. கடந்த ஓராண்டுக்கு மேலாக கட்டு மான பணி நடந்து வருகிறது.
இந்த ஒருங்கிணைந்த சோதனை சாவடி அமைக்கும் பணியினை ஆந்திர மாநில காவல்துறை டிஜிபி ராமுடு நேற்று பார்வையிட்டு, சோதனை சாவடி யின் சிறப்பு அம்சங்கள் குறித்து கேட்டறிந்தார். அப்போது, திருவள்ளூர் எஸ்பி சாம்சன், கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி சிவ லிங்கம் மற்றும் ஆந்திர மாநில போலீஸ் உயரதிகாரிகள் உடனி ருந்தனர்.
பிறகு, ராமுடு தெரிவித்ததாவது: தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டு வரும் நவீன ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி குறித்து, அறிந்து கொள்ள தமிழகம் வந்தேன். ஆந்திர வனப் பகுதிகளில் செம்மரங்களை வெட்டி கடத்தலில் ஈடுபட்ட முக்கிய புள்ளிகளில் 90 சதவீதம் பேர் கைது செய்யப்பட்டு ஆந்திர சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலங்கள் மட்டுமல்லாமல், வெளிநாடுகளில் பதுங்கியுள்ள 10 சதவீத செம்மரக் கடத்தல் முக்கிய புள்ளிகளை கைது செய்ய நடவடிக்கை மேற் கொண்டு வருகிறோம். ஆந்திரா வில் செம்மர கடத்தல் கட்டுப் படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், சிலர் புதுப்புது உத்திகளை கையாண்டு செம்மரங்களை கடத்தி வருகின்றனர். அதனை தடுக்கும் நடவடிக்கையை தீவிரப் படுத்தியுள்ளோம். மரம்வெட்டும் கூலி தொழிலாளிகள், பணத்துக்கு ஆசைப்பட்டு செம்மர கடத்தல் காரர்களின் வலையில் சிக்கி தங்கள் வாழ்நாளை சிறைகளில் கழிக்க வேண்டாம் என்று அவர் கூறினார்.