Published : 28 Sep 2020 06:38 PM
Last Updated : 28 Sep 2020 06:38 PM

அரைசதத்தைக் கடந்த பெரிய வெங்காயம் விலை: வடமாநிலங்களில் தொடர் மழையால் வரத்து குறைந்தது 

வடமாநிலங்களில் தொடர்மழை காரணமாக பெரிய வெங்காயத்தின் வரத்து வெகுவாகக் குறைந்ததால் வெளிமார்க்கெட்டில் ஒரு கிலோ ரூ.52 முதல் ரூ.60 வரை விற்பனையாகிறது.

கடந்த சில வாரங்களாக சின்னவெங்காயம், பெரியவெங்காயம் விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது. வழக்கமாக சின்னவெங்காயம் விலையை விட பெரியவெங்காயம் ஐந்து ரூபாய், பத்து ரூபாய் என குறைந்தே விற்கப்படும்.

இந்நிலையில் தற்போது சின்ன வெங்காயமும், பெரிய வெங்காயமும் ஒரே விலைக்கு விற்கப்படுகிறது. பெரிய வெங்காயம் விலை மேலும் அதிகரிக்கும் என்கின்றனர் வியாபாரிகள். பெரிய வெங்காயம் அதிகம் பயிரிடப்படும் மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களில் தற்போது தொடர் மழை பெய்துவருகிறது.

இதனால் பயிரிடப்பட்ட பெரிய வெங்காயம் அறுவடைசெய்ய முடியாதநிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பு வைக்கப்பட்ட வெங்காயத்தின் வரத்து தமிழகத்திலுள்ள வெங்காய மார்க்கெட்டிற்கு பாதியாக குறைந்துவிட்டதால் விலை அதிகரிக்கத்தொடங்கியது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பெரியவெங்காயத்தின் விலை வெகுவாக உயர்ந்து தற்போது வெளி மார்க்கெட்டில் ஒரு கிலோ பெரியவெங்காயம் ரூ.52 முதல் ரூ.60 வரை விற்பனையாகிறது.

சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.45 முதல் ரூ.55 வரை விற்பனையாகிவரும்நிலையில் பெரியவெங்காயம் விலை இதனையும் கடந்து அதிகவிலைக்கு விற்கிறது.

மழைக்காலம் முடிந்தாலும் இனி புதிதாக பயிரிடப்பட்ட பெரிய வெங்காயம் அறுவடைக்கு வர நாட்கள் ஆகும் என்பதால் இதன்விலை தற்போதைக்கு குறைய வாய்ப்பில்லை என்கின்றனர், திண்டுக்கல் வெங்காய கமிஷன் மண்டி வியாபாரிகள்.

இதுகுறித்து திண்டுக்கல்லைச் சேர்ந்த வெங்காயம் ஏற்றுமதி செய்யும் வியாபாரி மாரிமுத்து இந்து தமிழ் செய்தியாளரிடம் கூறியதாவது:

தேவைகள் அதிகம் இல்லாதபோதும், வரத்து மிகக்குறைந்ததால் பெரிய வெங்காயம் விலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. வடமாநிலங்களில் மழைகாலம் முடிந்தாலும் புதிதாக வெங்காய வரத்து எப்பொழுது ஏற்படுகிறதோ அப்போது தான் பெரிய வெங்காயம் விலை குறையத்தொடங்கும். பெங்களூரு மார்க்கெட்டில் இருந்து தற்போது குறைவான லாரிகளிலேயே திண்டுக்கல் வெங்காய மார்க்கெட்டிற்கு வெங்காய வரத்து உள்ளது.

வெங்காய ஏற்றுமதிக்கு திடீர் தடை காரணமாக கண்டெய்னரில் நிரப்பப்பட்டு கப்பலில் ஏற்றப்பட்ட வெங்காயங்கள் தற்போது கப்பலில் இருந்து இறக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.

இவை வந்தாலும் பெரிய வெங்காயத்தின் தேவையை பூர்த்திசெய்ய முடியாது. வெளிநாடுகளில் இருந்து பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்ய தேவை ஏற்படவும் வாய்ப்புண்டு. இதனால் பெரியவெங்காயம் விலை தற்போதைக்கு குறையவாய்ப்பில்லை, என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x