Published : 28 Sep 2020 06:06 PM
Last Updated : 28 Sep 2020 06:06 PM

வேளாண் சட்டங்களை எதிர்த்து திமுக கூட்டணி கட்சிகள் நடத்திய போராட்டம் தோல்வி: முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

வேளாண் சட்டங்களைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நடத்திய போராட்டம் மிகப்பெரிய தோல்வி அடைந்துள்ளது என கோவில்பட்டியில் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பாஜக கேந்திர பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ராமமூர்த்தி தலைமை வகித்தார்.

கோட்ட இணை பொறுப்பாளர் டி.ராஜா, மாவட்ட பொதுச்செயலாளர் ஆர்.டி.பாலாஜி, மாநில செயற்குழு உறுப்பினர் எம்.ஆர்.கனகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சட்டமன்ற தேர்தல் பணிகளில் நிர்வாகிகள் பணியாற்றுவது குறித்து ஆலோசனைகளை வழங்கி பேசினார்.

மாவட்ட பொதுச்செயலாளர் சரவண கிருஷ்ணன், நகர தலைவர் பாலசுப்பிரமணியன், மாவட்ட துணை தலைவர்கள் ராஜ்குமார், உமா செல்வி, ஒன்றிய தலைவர் மாரிமுத்து, மாவட்டச் செயலாளர் வேல்ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறும்போது, "நாடே தீப்பற்றி எரிகிறது என்ற கனிமொழி எம்.பி.யின் வார்த்தையில் இருந்து ஒன்று புரிகிறது. பாஜக தமிழகத்தில் வேகமெடுத்து வளர்வதைப் பார்த்து திமுகவினரின் அடிவயிறு பற்றி எரிகிறது. அவர்களது இன்றைய போராட்டம் மிகப்பெரிய தோல்வி. இதனை நான் நேரில் பார்த்தேன்.

மக்கள் இன்று அனைத்து விஷயங்களையும் புரிந்து கொண்டனர். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக மாற்ற வேண்டும். அவர்களது வறுமையை நீக்கி அவர்களை வளம் பொருந்தியவர்களாக மாற்ற வேண்டும். இதற்கு என்னென்ன மாற்றங்கள் கொண்டு வந்தால் சரியாக இருக்கும் என அறிஞர் குழுவை நியமித்து அவர்களுடைய பரிந்துரைகளின் அடிப்படையில் பிரதமர் நரேந்திரமோடி முடிவு எடுத்துள்ளார். இதனை அனைத்து விவசாயிகளும் வரவேற்கின்றனர். ஆனால், விவசாயிகளை வைத்து அரசியல் நடத்த விரும்புபவர்கள் எதிர்க்கிறார்கள்.

இதற்கு முன் டெல்லியில் நடந்த விஷயங்களை விவசாயிகளே வெளிப்படையாக கூறினர். தலைநகர் டெல்லியில் தமிழக விவசாயியை கேவலப்படுத்தியது திமுக. அவர்கள் தமிழன், விவசாயி என பார்க்க மாட்டார்கள். அரசியல் ஆதாயத்துக்காக யாரை வேண்டுமென்றாலும் கேவலப்படுத்துவார்கள். அதனால் அவர்கள் கூறுவதை பொருட்டாக எடுக்க வேண்டிய தேவையில்லை.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் குறித்து கிராமப்புற விவசாயிகளுக்கு புரிய வைப்பதற்காக கூட்டங்கள் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஏற்கெனவே ஊடகங்களில் வரும் செய்திகளை பார்த்தே விவசாயிகள் வரவேற்றுள்ளனர். இந்த சட்டங்கள் குறித்து முழுமையாக தெரியவரும் போது அதிக வரவேற்பு கிடைக்கும்.

பாஜகவில் உள்ளவர்கள் பதவியைg குறித்து பெரியதாக எடுத்துக்கொள்வதில்லை. எங்களைப் பொருத்தவரை தமிழகத்தில் ஆளுகின்ற நிலைக்கு பாஜகவை கொண்டு வரக்கூடிய பணியில் உள்ளோம். அதற்கான முன்னெடுப்புகளில் வேலை செய்து கொண்டுள்ளோம், என்றார் அவர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x