

புதுக்கோட்டை மாவட்ட ஊரகப் பகுதி இளைஞர்களின் வேலைவாய்ப்புக்குக் கறம்பக்குடி டாக்டர் அம்பேத்கர் இலவச வேலைவாய்ப்புப் பயிற்சி மையம் வழிகாட்டி வருகிறது.
படித்துவிட்டு வேலைவாய்ப்பில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் 2017-ல் அரசுத் துறையில் பணிபுரியும் 16 பேர் சேர்ந்து டாக்டர் அம்பேத்கர் இலவச வேலைவாய்ப்புப் பயிற்சி மையத்தை உருவாக்கினர்.
இங்கு, டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி, காவல்துறை உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளை எழுதுவோருக்கு இலவசமாகப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இம்மையத்தில், தினந்தோறும் பயிற்சி நடைபெற்று வருகிறது. கரோனா சமயத்திலும்கூட இணைய வழியாகப் பயிற்சி நடைபெற்று வருகிறது. குறிப்பாக 13 முறை தேர்வுகளும் நடத்தப்பட்டுள்ளன.
இங்கு பயிற்சி பெற்றவர்களில் 33 பேர் அரசுப் பணிக்குச் சென்றுள்ளனர். தொடர்ந்து, இப்பயிற்சி மையத்தை சர்வதேசத் தரத்துக்கு உயர்த்துவதற்கான பணிகளில் மையத்தின் பொறுப்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்துப் பயிற்சி மையத்தின் தலைவர் சுகுமார் கூறியதாவது:
’’பள்ளி, கல்லூரிகளில் கடும் முயற்சி செய்து படித்து நல்ல மதிப்பெண்களைப் பெற்றிருந்தாலும்கூட அவ்வளவு எளிதாக அனைவருக்கும் வேலைவாய்ப்பு அமைந்து விடுவதில்லை. ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்தோர் பெருந்தொகையைச் செலவிட்டு, பெருநகரங்களுக்குச் சென்று தனியார் பயிற்சி மையங்களில் பயில்வதற்கான வாய்ப்பு இல்லை.
படித்தவுடன் வேலைவாய்ப்பு கிடைக்காததால் ஏற்படும் பொருளாதார நெருக்கடியானது குடும்பத்தில் மட்டுமின்றி சமூகத்திலும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உயர் கல்வி வரைகூட இலவசமாகவும், குறைந்த கட்டணத்திலும் பயில்வதற்கு ஏராளமான கல்வி நிலையங்கள் உள்ளன. ஆனால், வேலைவாய்ப்புக்கான பயிற்சியை எளிதாகப் பெறுவதற்குரிய வசதி இல்லை. இந்த சிரமத்தைப் போக்குவதற்காகவே வருவாய்த் துறை அலுவலர்கள், அரசு ஆசிரியர்கள் என 16 பேர் சேர்ந்து இப்பயிற்சி மையத்தை உருவாக்கினோம்.
பிற பகுதிகளில் இருந்தும் திறமையானவர்களை வரவழைத்து இங்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும், இம்மையத்தின் பொறுப்பாளர்கள் அனைவரும் போட்டித் தேர்வுகள் மூலம் வேலைக்குச் சென்றவர்கள் என்பதால் நாங்களும் பல நேரங்களில் பயிற்சி அளிக்கிறோம். வகுப்புகளைக் கண்காணிக்கப் பணியாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
மையத்தின் பொறுப்பாளர்கள்16 பேரும் மாதந்தோறும் தலா ரூ.1,000 வீதம் கொடுத்து மையத்தை நடத்தி வருகிறோம். கடந்த 3 ஆண்டுகளில் மாவட்டத்தின் ஊரகப் பகுதிகளில் இருந்து 1,000-த்துக்கும் மேற்பட்டோர் பயிற்சி பெற்றுள்ளனர். அவர்களில், ஆசிரியராக 12 பேர், காவல்துறையில் 12 பேர், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டப் பணியாளர் ஒருவர், டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் 8 பேர் என 33 பேர் அரசுப் பணிக்குச் சென்றுள்ளனர். படிப்படியாக இதன் எண்ணிக்கை அதிகரிக்கும். கரோனா சமயத்திலும்கூட இடைவிடாது சுமார் 200 மாணவர்கள் இணையதளம் மூலம் பயிற்சி பெற்று வருகின்றனர்.
இம்மையத்துக்குச் சொந்தமாகக் கட்டிடம் கட்டுவதற்காக 10 சென்ட் இடம் வாங்கப்பட்டுள்ளது. அதில், 3 தளங்களைக் கொண்ட கட்டிடம் கட்டப்பட உள்ளது. அக்கட்டிடத்தில் நூலகம், நவீனத் தொழில்நுட்ப வசதிகள், இணைய வசதிகளுடன் கூடிய கணினி அறை போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.
அத்துடன், தையல், தட்டச்சு போன்ற பயிற்சிகளும் அளிக்கப்பட உள்ளன. இதை சர்வதேசத் தரத்தில் ஓர் ஐஏஎஸ் பயிற்சி மையமாக உருவாக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்’’.
இவ்வாறு சுகுமார் தெரிவித்தார்.