குலசேகரன்பட்டினம் திருவிழாவில் காளி வேடமணியும் பக்தர்களை கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும்: இந்து முன்னணி அமைப்பினர் ஆட்சியரிடம் மனு

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் காளி வேடமணிந்த பக்தர்களை கோயிலுக்குள் தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த இந்து முன்னணியினர். படம்: என்.ராஜேஷ்
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் காளி வேடமணிந்த பக்தர்களை கோயிலுக்குள் தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த இந்து முன்னணியினர். படம்: என்.ராஜேஷ்
Updated on
2 min read

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் காளி வேடமணியும் பக்தர்களை கோயிலுக்குள் தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என, இந்து முன்னணியினர், காளி பக்தர்கள் குழுவினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.

இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார் தலைமையில் இந்து முன்னணியினர் இன்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் அளித்த மனு விபரம்:

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா மைசூர் தசரா திருவிழாவுக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் நடைபெறும் முக்கியமான திருவிழாவாகும்.

இந்த தசரா திருவிழாவுக்கு காளி வேடம் அணியும் பக்தர்கள் மாலை அணிந்து 48 நாட்கள் கடும் விரதம் இருந்து வருகின்றனர். விரதம் இருந்து காளி வேடம் அணியும் பக்தர்கள் 10-ம் திருவிழா அன்று நடைபெறும் சூரசம்ஹார விழாவுக்கும் மற்றும் கோவிலுக்குள் தரிசனத்துக்கும் சமூக இடைவெளியுடன் அனுமதிக்க வேண்டும்.

மேலும் உள்ளூர் பத்திரகாளியம்மன் கோவில் சப்பரம் முத்தாரம்மன் கோவிலுக்கு வந்து எதிர் சேவை செய்ய அனுமதிக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் தூத்துக்குடி சிவ பாரத இந்து மக்கள் இயக்க தலைவர் பாலசுப்பிரமணியன் அளித்த மனுவில், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா மக்கள் கலந்துகொண்டு விழா சிறப்பாக நடைபெற அரசும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விழாவுக்கு அனுமதி கிடைக்காத பட்சத்தில் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் முன்பு சிவ பாரத இந்து மக்கள் இயக்கம் சார்பில் வரும் 4-ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காளி பக்தர்கள் குழு:

குலசேகரன்பட்டினம் காளி பக்தர்கள் குழுவினர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனு: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி நடைபெற அனுமதி அளிக்க வேண்டும். ஒவ்வொரு தசரா குழுவுக்கும் ஒரு காளி வேடம் அணிபவரும், குழு தலைவர் மற்றும் ஒரு நபர் மட்டும் கோயிலுக்கு வந்து மொத்தமாக காப்புகளை வாங்கிச் சென்று காப்பு கட்டுவதற்கு அனுமதி வழங்க வேண்டும்.

திருவிழா நாட்களில் 2- லிருந்து 9 நாட்களுக்குள் விரதமிருந்த பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்ற கடற்கரையில் ஏதாவது ஒரு இடத்தில் அரசு வழிகாட்டு நெறிமுறைகளில் எங்களுக்கு ஏற்பாடு செய்து தரவேண்டும். கட்டளைதாரர்கள் அபிஷேகம் பார்க்கவும் வழிபடவும் அனுமதிக்க வேண்டும். இல்லாதபட்சத்தில் கட்டளைதாரர்களிடம் பணம் ஏதும் பெறாமல் கோயில் பணத்திலேயே விழாவை நடத்த அனுமதிக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் முறைகேடு:

தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில துணைத் தலைவர் நெப்போலியன் மற்றும் நிர்வாகிகள் ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில், தூத்துக்குடி மாவட்ட டாஸ்மாக் மேலாளர் மீது பல்வேறு புகார்கள் வந்துள்ளன.

டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்க நிர்வாகிகள். படம்: என்.ராஜேஷ்

ஆறுமுகநேரி டாஸ்மாக் கடையில் ரூ.1.75 கோடிம் வரை இருப்பு தொகை குறைவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.. இதனால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்ய வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதை சேதம்:

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள ஜம்புலிங்கபுரம் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், ஜம்புலிங்கபுரம் கிராமத்தில் சுமார் ஆயிரம் குடும்பங்கள் விவசாய கூலி வேலை செய்து பிழைத்து வருகிறோம். நாங்கள் ஆண்டாண்டு காலமாக பயன்படுத்தி வந்த வண்டிப்பாதையை சிலர் சேதப்படுத்தி உள்ளனர். இதனால் தங்கள் வயலுக்குச் செல்ல முடியாமல் சிரமப்பட்டு வருகிறோம். ஆகையால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பழையபடியே பாதையை அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

பாதை சேதம் தொடர்பாக ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த ஜம்புலிங்கபுரம் கிராம மக்கள். படம்: என்.ராஜேஷ்

செல்போன்:

தூத்துக்குடி 30-வது வட்ட அமமுக செயலாளர் காசிலிங்கம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், தூத்துக்குடி விவிடி சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும். டூவிபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆன்லைன் வகுப்புகள் நடந்து வருகிறது. இதில் பல குழந்தைகளுக்கு உரிய போன் வசதி இல்லாததால் படிப்பை தொடர முடியவில்லை. ஆகையால் அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு ஸ்மார்ட்போன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in