

சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கில் 2 பெண் காவலர்கள் உள்ளிட்ட சாட்சிகளின் வாக்குமூலத்தைத் தாக்கல் செய்ய சிபிஐக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வியாபாரி ஜெயராஜ், அவர் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள காவலர்கள் முருகன், முத்துராஜ், தாமஸ் பிரான்ஸ் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனுக்கள் நீதிபதி பாரதிதாசன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில், காவலர் முருகன் அளித்த வாக்குமூலத்தில் தந்தை, மகன் இருவரையும் சார்பு ஆய்வாளர் ரகுகணேஷ் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸாருடன் சேர்ந்து நள்ளிரவுக்கு மேலும் தாக்கியதாகத் தெரிவித்துள்ளார்.
ஆனால் பிரண்ட்ஸ் ஆப் போலீஸார் குறித்து விசாரிக்கவில்லை. காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் தூண்டுதலின் பேரில் சம்பவம் நடைபெற்றதாக சிபிஐ கூறியுள்ளது. ஆனால் அதற்கான காரணம் குறித்து விசாரிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதி, சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் இருக்கும் போது, காரணம் குறித்து ஆராய தேவையில்லை. இந்த வழக்கில் குற்றத்தின் தன்மையை கருத்தில் கொண்டு சாட்சிகள் கலைக்கப்பட்டுவிடக்கூடாது என நீதிமன்றம் கருதுகிறது என்றார்.
சிபிஐ வழக்கறிஞர் வாதிடுகையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 10 பேரும் ஜெயராஜ், பென்னிக்ஸை சட்டவிரோதமாக அடைத்து வைத்து தாக்கியது உள்ளிட்ட குற்றங்களில் தொடர்புடையவர்கள்.
வழக்கு தொடர்பாக இதுவரை 105 சாட்சிகளை விசாரித்துள்ளோம். மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார்.
இந்த வழக்கில் காவலர் தாமஸ் பிரான்சிஸின் பங்கு என்ன? என நீதிபதி கேட்டபோது, பென்னிக்ஸை சார்பு ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தாக்கும் போது, பென்னிக்ஸின் கைகளை தாமஸ்பிரான்சிஸ் பிடித்து வைத்துள்ளார்.
அதிகாலை 3 மணி வரை பென்னிக்ஸ் தாக்கப்பட்டுள்ளார். அவர் தாக்கப்பட்ட போதெல்லாமல் அவரது கைகளை தாமஸ் பிரான்சிஸ் பிடித்து வைத்துள்ளார் என சிபிஐ வழக்கறிஞர் தெரிவித்தார்.
பின்னர், இரட்டை கொலை வழக்கில் 2 பெண் காவலர்கள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்கள் மற்றும் குற்றப்பத்திரிகை நகலை தாக்கல் செய்ய சிபிஐ-க்கு உத்தரவிட்டு வழக்கை தீர்ப்புக்காக நீதிபதி ஒத்திவைத்தார்.