

உலக முதலீட்டாளர்கள் மாநாடு மக்களை திசை திருப்பும் முயற்சி என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: உலக முதலீட் டாளர்கள் மாநாடு கடந்தாண்டு அக்டோபரில் நடக்குமென்று அறிவிக்கப்பட்டது. பின்னர் 2015, மே 23, 24 தேதிகளில் நடத்தப்படும் என்று சொல்லப்பட்டது. அப்போதும், நடைபெறாத அந்த மாநாடு, செப்டம்பர் 9, 10 தேதிகளில் உலக தொழில் முதலீட்டு மாநாட்டினை நடத்தவுள்ளனர். சட்டப்பேரவை தேர்தல் வரவுள்ள நிலையில் மக்களை திசை திருப்பும் முயற்சியாகவே இந்த மாநாடு நடத்தப்படுகிறது.
இதனால் தமிழகத்தின் எந்த பிரச்சினையும் தீராது. லஞ்சம், ஊழல், எளிதில் அணுக முடியாத நிர்வாகம் போன்ற காரணங்களால்தான் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி நலிவுற்றது. பல சிறு, குறு நிறுவனங்கள் வெளி மாநிலங்களுக்கு சென்றுவிட்டன. நோக்கியா, ஃபாக்ஸ்கான். ரினால்ட் நிசான் போன்ற நிறுவனங்கள் வெளி மாநிலங்களுக்கு செல்லும் நிலையில் உள்ளன.
அதிமுக அரசு ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகளில், இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுடன் போடப்பட்ட 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் அடிப்படையில் ரூ.31 ஆயிரத்து 706 கோடி முதலீடும், அதன் மூலம், 1 லட்சத்து 62 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்பட்டது.
ஆனால், தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 17 நிறுவனங்கள் மூலம் ரூ.11 ஆயிரத்து 68 கோடிக்கு முதலீடு பெறப்பட்டுள்ளது என்றும் அதன் மூலம் 15 ஆயிரத்து 617 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது” என்றும் அமைச்சர் கூறியுள்ளார். இந்த நிலையில் தான் உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் ரூ.1 லட்சம் கோடிக்கு புதிய முதலீடுகள் வரும் என்று சொல்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.