Last Updated : 28 Sep, 2020 04:22 PM

 

Published : 28 Sep 2020 04:22 PM
Last Updated : 28 Sep 2020 04:22 PM

அரசு நிதி ரூ.29 கோடி வீண்: மோசமான நிலையில் புதுச்சேரி போக்குவரத்து நகரம்- ஆளுநர், முதல்வரிடம் புகார்

அரசு நிதி ரூ.29 கோடி செலவில் உருவாகி, பராமரிப்பின்றிப் பெயரளவில் புதுச்சேரி போக்குவரத்து நகரம் செயல்படுவதாகவும் இதைச் சீரமைத்து நகராட்சியே நிர்வகித்தால் அரசுக்கு வருவாய் கிடைக்கும் எனவும் ஆளுநர், முதல்வருக்கு மனு தரப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் மிக முக்கியப் பிரச்சினை போக்குவரத்து நெரிசல். இதனால் அரசு முக்கிய சாலைகளை விரிவாக்கம் செய்தாலும், சாலையோரங்களில் கனரக வாகனங்களை வரிசையாக நிறுத்துவது வழக்கமாக உள்ளது.

இதைத் தவிர்க்க மேட்டுபாளையத்தில் கனரக வாகனங்களை நிறுத்தப் போக்குவரத்து நகரம் (Track Terminal) 2003-ல் அமைக்கப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து சாலையோரத்தில் கனரக வாகனம் நிறுத்தப்படுவதுடன், போக்குவரத்து நகரமும் பராமரிப்பின்றி உள்ளது. இதையடுத்துத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில், ராஜீவ்காந்தி மனித உரிமைகள் விழிப்புர்ணர்வு அமைப்பு தலைவர் ரகுபதி தகவல் பெற்று இதுகுறித்து இன்று ஆளுநர், முதல்வரிடம் மனு தந்துள்ளார். இதுதொடர்பாக ரகுபதி கூறியதாவது:

கடந்த 2003-ம் ஆண்டு ரூ.26.52 கோடியில் பல தரப்பிடம் 45 ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்திப் போக்குவரத்து நகரத்தை அமைக்கத் தொடங்கியது. இங்கு சாலை, குடிநீர், அலுவலகம், ஓய்வு அறை ஆகிய வசதிகள் ரூ.2.77 கோடியில் செய்யப்பட்டன. மொத்தமாக ரூ.29.3 கோடி செலவிடப்பட்டு அமைக்கப்பட்ட போக்குவரத்து நகரம், கடந்த 25.6. 2007-ல் திறக்கப்பட்டது. போக்குவரத்து நகரத்தைப் பராமரித்து அங்கு நிறுத்தப்படும் வாகனங்களுக்குக் கட்டணம் வசூலிக்க புதுச்சேரி லாரி உரிமையாளர்கள் சங்கத்துக்கு அனுமதியை அரசு தந்துள்ளது.

புதர்களுக்கு நடுவே திறப்பு விழா கல்வெட்டு

மொத்தம் ரூ.29 கோடி அரசு செலவிட்டு அமைக்கப்பட்ட போக்குவரத்து நகரம் தற்போது சீரழிந்துள்ளது. போக்குவரத்து நகரத்தின் அலுவலகத்துக்குத் தற்போது கதவுகளே இல்லை. தற்போது மது அருந்துவோர் இடமாக மாறிவிட்டது. திறப்பு விழாக் கல்வெட்டை சுற்றிச் புதர் மண்டியுள்ளது. இந்த இடத்தில் தற்போது யாரும் வாகனங்களை நிறுத்தாமல் சாலை ஓரத்திலேயே நிறுத்துகின்றனர். இதனால் அரசு நிதி கோடிக்கணக்கில் வீணாகியுள்ளது.

இருசக்கர வாகன நிறுத்துமிடம், கழிப்பிடம் ஆகியவற்றைப் பராமரித்துக் கட்டணம் வசூலிக்க டெண்டர் விடப்படுகிறது. பல கோடி ரூபாய் செலவு செய்யப்பட்ட போக்குவரது நகரத்தைப் பராமரித்துக் கட்டணம் வசூலிக்க டெண்டர் விடாதது ஏன் எனக் கேள்வி எழுகிறது. போக்குவரத்து நகரத்தைச் சீரமைத்து, நகராட்சியே கனரக வாகனங்களுக்குக் கட்டணம் வசூலித்தால் வருவாய் கிடைக்கும். சாலைகளிலும் கனரக வாகனங்கள் நிறுத்துவது குறையும் என்று மனு தந்துள்ளேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x