Published : 28 Sep 2020 03:09 PM
Last Updated : 28 Sep 2020 03:09 PM

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு நாங்கள் எப்போதும் தயார்: திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் பேட்டி

வேலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன்.

வேலூர்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு நாங்கள் எப்பொழுதும் தயாராகவே இருக்கிறோம் என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்தும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (செப்.28) நடைபெற்றது.

வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். அப்போது அவர் பேசும்போது, ''விவசாய சட்டத் திருத்த மசோதா குறித்துப் பேசுபவர்களுக்கும் புரியாது, கேட்பவர்களுக்கும் புரியாது. அப்படி ஓர் ஓட்டையுள்ள, குழப்பமான சட்டம். இந்தச் சட்டத்தை முறை தவறிய வழியில் கொண்டு வந்துள்ளனர். பிஹார் உள்படப் பல மாநில முதல்வர்கள் இந்தச் சட்டத்தை எதிர்த்துள்ளனர். இதனால், பயந்துபோய்தான் சட்டத்தை உடனடியாக நிறைவேற்றி உள்ளனர். ஒளிவுமறைவு இல்லாத சட்டம் என்றால் ஏன் அவசர அவசரமாக நிறைவேற்ற வேண்டும்?

ஜியோ வந்த பிறகு பிஎஸ்என்எல் இருக்கும் இடமே தெரியாமல் போனது. அதுபோலத்தான் இந்தச் சட்டமும் இருக்கும். மார்க்கெட் கமிட்டி முறை முழுவதுமாக ஒழிக்கப்பட்டுவிடும். சில பொருட்களை அத்தியாவசியப் பொருட்களின் பட்டியலில் இருந்து எடுப்பார்கள். பின்னர், பொருட்களைப் பதுக்கி தனிப்பட்ட முதலாளிகள் லாபம் பார்க்க இந்தச் சட்டம் உதவும். இந்த சட்டம் குறித்துச் சிறு புத்தகமாகப் போட்டு கட்சியினர் பொதுமக்களுக்கு வழங்க வேண்டும்'' என்று துரைமுருகன் பேசினார்.

பின்னர், செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறும்போது, ''அதிமுகவினர் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். நாங்கள் எப்போதும் தேர்தலுக்குத் தயாராகவே இருக்கிறோம்'' என்று துரைமுருகன் தெரிவித்தார்.

அப்போது, திமுக மாவட்டச் செயலாளரும் எம்எல்ஏவுமான ஏ.பி.நந்தகுமார், வேலூர் எம்எல்ஏ கார்த்திகேயன், காங்கிரஸ் கட்சியின் மாநகர் மாவட்டத் தலைவர் டீக்காராமன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x