

புதுக்கோட்டை மாவட்டத்தில் காகிதங்களைக் கொண்டு போர்க் கருவிகள் உள்ளிட்ட இயந்திரங்கள், பொருட்களின் மாதிரிகளைக் கலைநயத்தோடு தயாரித்து வரும் இளைஞருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
புதுக்கோட்டை மாவட்டம் தேக்காட்டூர் ஊராட்சி, குறிஞ்சிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆர்.ஆனந்தராஜ். பொறியாளரான இவர், கரோனாவுக்கு முன்பு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். தற்போது வேலைவாய்ப்பின்றி வீட்டில் தங்கியுள்ளார். 9-ம் வகுப்பிலிருந்தே காகிதங்களைக் கொண்டு வீடு, மரம், வாகனங்கள், போர்க்கலன்கள் போன்ற மாதிரிகளைத் தயாரித்து வருகிறார்.
தற்போது கரோனாவால் வீட்டில் இருந்து வரும் இவர், ராணுவத்தில் பயன்படுத்தப்படும் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், பீரங்கிகள், துப்பாக்கிகள், போர்க் கப்பல்கள், பொக்லைன், லாரி போன்ற ஏராளமான கருவிகளைப் போன்று 2 அடியில் இருந்து 5 அடி நீளமுள்ள காகித மாதிரிகளைத் தயாரித்து வைத்துள்ளார்.
கலைநயத்தோடு இவர் செய்து வரும் பொருட்களை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஏற்கெனவே கல்வி நிலையங்களில் பயன்படுத்தி வருகின்றனர். இதுபோன்ற மாதிரிகளைத் தயாரிப்பது குறித்து மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும். மேலும், போர்க் கருவிகள் தயாரிக்கும் பிரிவில் சேர்வதற்கும் அரசு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதே அவரது எதிர்பார்ப்பாக உள்ளது.
இதுகுறித்து ஆனந்தராஜ் கூறும்போது, ''மாணவர்களுக்குக் கட்டணம் ஏதுமின்றி காகித மாதிரிகளைச் செய்து கொடுத்து வந்தேன். அதைப் பார்த்து ஆசிரியர்கள், பிற மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என்னைப் பாராட்டினர். அதனால், தொடர்ந்து ஏராளமான மாதிரிகளைச் செய்து வருகிறேன். தற்போது, மாணவர்கள் அவ்வளவு எளிதாகப் பார்க்க முடியாத முப்படைகளில் பயன்படுத்தப்படும் போர்க் கருவிகளைப் பற்றிய மாதிரிகளை வடிவமைத்துள்ளேன். பள்ளி, கல்லூரிகள் இயங்காததால் யாருக்கும் கொடுக்க இயலவில்லை.
நானும் பொறியாளராக இருப்பதால் போர்க் கருவிகள் தயாரிக்கும் பிரிவில் சேர வேண்டும் என்ற விருப்பம் உள்ளது. மேலும், படைப்பாற்றல் திறனை அதிகரிக்கக்கூடிய இந்த மாதிரிகளைத் தயாரிப்பது குறித்து மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் வகையில் அரசு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்'' என்றார்.
மாதிரிகள் தயாரிப்பு குறித்த ஆலோசனைகளுக்கு 97864 27182 ன்ற எண்ணில் ஆனந்தராஜைத் தொடர்புகொள்ளலாம்.