Published : 28 Sep 2020 12:28 PM
Last Updated : 28 Sep 2020 12:28 PM

தமிழக அரசுக்கு மத்திய அரசு தரவேண்டிய ஜிஎஸ்டி நிலுவை உள்ளிட்ட ரூ.23,763.36 கோடி: உடனடியாக அளிக்க அதிமுக செயற்குழு தீர்மானம்

தமிழ்நாடு அரசுக்கு, மத்திய அரசு தர வேண்டியுள்ள ஜிஎஸ்டி நிலுவைத் தொகை மற்றும் பல்வேறு திட்டங்களுக்கான மானியங்களின் நிலுவைத் தொகைகள் மற்றும் கரோனா நிவாரணத் தொகைளை உடனடியாக வழங்க மத்திய அரசை அதிமுக செயற்குழு வலியுறுத்தியுள்ளது.

இன்று நடந்த அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் கரோனா நிவாரணத் தொகை, ஜிஎஸ்டி உள்ளிட்ட நிலுவை நிதிகளை உடனடியாக ஒப்படைக்கக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கரோனா தடுப்புக்குப் போதிய நிதி வழங்கக் கோரி தீர்மானம்:

''உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்படியும், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுவின் நெறிகளின்படியும், இந்தியாவிலேயே மிகச் சிறந்த முறையிலும், அதிக எண்ணிக்கையிலும், தமிழ்நாட்டில் கரோனா நோய்த் தடுப்பிற்கான உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு உள்ளன. இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத அளவிற்கு, தமிழ்நாட்டில் 182 பரிசோதனை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 66 அரசு பரிசோதனை நிலையங்களில் கரோனா நோய்ப் பரிசோதனை 24 மணி நேரமும் நடைபெற்று வருகிறது.

கரோனா நோய்த்தொற்றை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, சிகிச்சை அளிக்கும் முதல் மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. உலகின் மிகப் பெரிய வல்லரசு நாடுகளில் கூட மக்களுக்கு எளிதில் கிடைத்திடாத ரெம்டெஸ்வீர், டோசிலி ரெம்டெஸ்வீர், டோசிலி ரெம்டெஸ்வீர், டோசிலிசுமாப், எனோக்ஸாபெரின் சுமாப், எனோக்ஸாபெரின் சுமாப், எனோக்ஸாபெரின் போன்ற விலை உயர்ந்த மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் மக்களுக்கு எளிதில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கென இதுவரை சுமார் 830.65 கோடி ரூபாயை அரசு ஒதுக்கி இருக்கிறது.

தமிழ்நாடு முழுவதும் 310 அரசு மருத்துவமனைகள் மற்றும் 343 தனியார் மருத்துவமனைகள் என, 653 மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சை அளிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் தற்போது கரோனா பாதித்த நோயாளிகளுக்கென 60,648 படுக்கைகள் உள்ளன. இவற்றில் ஐசியூ என்ற தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் 5,642 படுக்கை வசதிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அறிகுறி இல்லாத மற்றும் லேசான அறிகுறிகள் உள்ள கரோனா நோயாளிகளைத் தொடர் கண்காணிப்பில் வைத்து சிகிச்சை அளிக்க 1,643 கோவிட் சிறப்பு மையங்கள் கண்டறியப்பட்டு, அதில் 617 மையங்கள் 83,627 படுக்கை வசதிகளுடன் செயல்பட்டு வருகின்றன.

கரோனா நோய்க்கான சிறப்பு சிகிச்சை அளிக்க 2,751 மருத்துவர்கள், 6,893 செவிலியர்கள் மற்றும் இதர மருத்துவப் பணியாளர்கள் உட்பட கூடுதலாக 15,000 பேர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஏழை, எளிய மக்கள் வாழ்கின்ற பகுதிகளில் 2,000 மினி கிளினிக் ஏற்படுத்தப்படும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேற்சொன்ன பணிகளையெல்லாம் உற்றுநோக்கி, இந்தப் பணிகள் வழியாக மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் நன்மைகளைக் கருத்திற்கொண்டு அரசை அனைத்துத் தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

மத்திய அரசு தமிழகத்தின் சிறப்பு வாய்ந்த மக்கள் நலன் காக்கும் பணிகளை ஊக்குவிக்கவும், நற்பணிகள் தொடரவும், கரோனா நோய்ப் பரவலைத் தடுக்கவும், நோயுற்றோருக்குச் சிகிச்சை அளிக்கவும், போதுமான நிதியை மாநில அரசுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்று இச்செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

ஜிஎஸ்டி உள்ளிட்ட நிலுவை நிதிகளை வழங்கக் கோரி தீர்மானம்:

தமிழ்நாடு அரசுக்கு, மத்திய அரசு தர வேண்டியுள்ள நிலுவை மானியங்கள் மற்றும் நிலுவைத் தொகையின் மொத்த அளவு 23,763.36 கோடி ரூபாயாக உள்ளது. இந்தத் தொகையினை மத்திய அரசு உடனடியாக வழங்குவது மிகவும் இன்றியமையாததாகும்.

பொருட்கள் மற்றும் சேவைகள் (ஜிஎஸ்டி) வரியினைச் செயல்படுத்தியதால் ஏற்பட்ட வருவாய் இழப்பீட்டுத் தொகையாக, 12,258.94 கோடி ரூபாயும், ஜிஎஸ்டியில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையாக 4,073.00 கோடி ரூபாயும் உள்ளன. அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தில் 1,092.22 கோடி ரூபாயும், அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் 2,109.08 கோடி ரூபாயும், வெள்ள மேலாண்மைத் திட்டத்தில் 342.94 கோடி ரூபாயும், குடும்ப நலத் திட்டத்தில் 68.88 கோடி ரூபாயும், இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்ட திட்டத்தில் 178.35 கோடி ரூபாயும் மத்திய அரசிடமிருந்து தமிழ்நாடு அரசுக்கு வரவேண்டி இருக்கிறது.

மீன்பிடி துறைமுகங்கள் கட்டுதல் திட்டத்தில் 9.25 கோடி ரூபாயும், பாசனப் பகுதி மேம்பாடு மற்றும் நீர்வரத்து மேலாண்மைத் திட்டத்தில் 81.13 கோடி ரூபாயும், 2014-2015 ஆம் ஆண்டு திட்டத்திற்கான கூடுதல் மத்திய நிதி உதவியாக 76.00 கோடி ரூபாயும், 2015 ஆம் ஆண்டு வெள்ளத்திற்காக பேரிடர் நிவாரண நிதியாக 66.90 கோடி ரூபாயும், தேசிய கைத்தறி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் விற்பனை ஊக்குவிப்புத் தொகை 53.79 கோடி ரூபாயும், மீனவர்களுக்கான தேசிய பாதுகாப்பு மற்றும் நிவாரணத் திட்டத்தின் கீழ் 123.84 கோடி ரூபாயும் தமிழ்நாடு அரசுக்கு வரவேண்டியுள்ளது.

நீர் அமைப்புகளைப் பழுதுபார்த்து, புதுப்பித்துச் சீரமைத்தல் திட்டத்தில் 25.90 கோடி ரூபாயும், பழங்குடியின மாணவர்களுக்கான மெட்ரிக் படிப்பிற்கு பிந்தைய படிப்பு உதவித்தொகை 18.50 கோடி ரூபாயும், திட்டங்கள் சார்ந்த நிலுவைத் தொகையாக மொத்தம் 16,505.32 கோடி ரூபாய் மத்திய அரசிடமிருந்து தமிழ்நாடு அரசுக்கு வரவேண்டி இருக்கிறது.

13 ஆவது நிதிக் குழுவின் நிலுவை மானியங்கள் 522.91 கோடி ரூபாயும், 14 ஆவது நிதிக் குழுவின் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தொகை 2,577.98 கோடி ரூபாயும், மாநில பேரிடர் பொறுப்பு நிதி 84.15 கோடி ரூபாயும் என மொத்தம் 3,185.04 கோடி ரூபாய் வரவேண்டியுள்ளது.

ஆக மொத்தம் ஜிஎஸ்டி வகையில் 4,073 கோடி ரூபாயும், திட்டங்கள் சார்ந்து அளிக்கப்பட வேண்டிய நிலுவைத் தொகை வகையில் 16,505.32 கோடி ரூபாயும், மானியங்கள் வகையில் 3,185.04 கோடி ரூபாயுமாக, மொத்தம் 23,763.36 கோடி ரூபாய் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் இருந்து தமிழகத்திற்குத் தரப்பட வேண்டியுள்ளது.

பல்வேறு வளர்ச்சிப் பணிகளிலும், மக்கள் நலப் பணிகளிலும், கரோனா நோய்த் தடுப்பு, நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளிலும், நாட்டிற்கே முன்னோடியாகச் செயல்பட்டு வரும் அதிமுக அரசு மேலும் சிறப்புடன் மக்கள் பணியாற்ற வேண்டும் என்று துடிப்புடன் செயல்பட்டு வருகிறது.

மத்திய அரசு, தமிழ்நாடு அரசுக்குத் தரவேண்டிய மொத்தத் தொகையான 23,763.36 கோடி ரூபாயையும் விரைந்து வழங்கி, தமிழ்நாடு அரசின் பணிகள் மென்மேலும் சிறந்து விளங்கிட தோள் கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசை இச்செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது''.

இவ்வாறு இரு தீர்மானங்களில் வலியுறுத்தப்பட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x