

கோவையில் கரோனா சிகிச்சைக்குக் கூடுதல் கட்டணம் வசூலித்த தனியார் மருத்துவமனையின் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்தார்.
கரோனா சிகிச்சை அளிப்பதற்காகக் கோவையில் 28 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒரு சில தனியார் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சைக்கு அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தைக் காட்டிலும் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும், நோயாளிகளுக்குச் சரியான ஊட்டச்சத்து உணவு வழங்குவதில்லை எனவும், சிகிச்சைக்கு அனுமதிப்பதில் பாரபட்சம் காட்டப்படுவதாகவும் மாவட்ட நிர்வாகத்துக்குப் புகார்கள் வந்தன. இதையடுத்து, தனியார் மருத்துவமனைகளைக் கண்காணிக்க சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டன.
அதைத் தொடர்ந்து, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனைகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, நோயாளிகளுக்குச் சரியான சிகிச்சை அளிக்கப்படுகிறதா, தரமான உணவு வழங்கப்படுகிறதா, அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தைக் காட்டிலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, விதிகளை மீறிய 4 தனியார் மருத்துவமனைகளுக்கு கடந்த 15 நாட்களுக்கு முன் நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதில், துடியலூரில் உள்ள தனியார் மருத்துவமனை நோட்டீஸ் கிடைத்தும் உரிய விளக்கம் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, தற்போது அங்குள்ள கரோனா நோயாளிகள் தவிர்த்து புதிதாக யாரையும் அனுமதிக்க முடியாதபடி, கரோனை சிகிச்சைக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கு.ராசமணி நேற்று தெரிவித்தார்.
அவர் மேலும் கூறும்போது, "கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், தொற்று பாதித்தவர்களில் வீட்டிலேயே தனிமைப்படுத்தும் வசதி இருப்பவர்கள் அங்கேயே தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி கோவையில் 961 பேருக்கு இதுவரை அனுமதி அளிக்கப்பட்டது. அவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டவர்கள் விதிகளைச் சரியாக கடைப்பிடிப்பதில்லை எனவும், அந்தக் குடும்ப உறுப்பினர்கள் வெளியே வருவதாகவும் புகார்கள் வந்தன. எனவே, நேற்று முன்தினம் முதல் வீட்டில் தனிமைப்படுத்த யாரும் அனுமதிக்கப்படுவதில்லை" என்றார்.