புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து திமுக தலைமையில் தோழமைக் கட்சிகள் தமிழகம் முழுவதும் போராட்டம்: காஞ்சியில் ஸ்டாலின் பங்கேற்பு

புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து திமுக தலைமையில் தோழமைக் கட்சிகள் தமிழகம் முழுவதும் போராட்டம்: காஞ்சியில் ஸ்டாலின் பங்கேற்பு
Updated on
2 min read

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து தமிழகம் முழுவதும் திமுக தலைமையில் அதன் தோழமைக் கட்சிகள் இணைந்து இன்று ஆர்ப்பாட்டம் நடத்தின. காஞ்சிபுரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியது. பல மாநிலங்கள் கடுமையாக எதிர்க்கும் நிலையில் தமிழக அரசு அதை ஆதரித்தது. இந்நிலையில் புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்ய கடந்த செப்.21 ஆம் தேதி அன்று தோழமைக் கட்சிகளுடனான கூட்டத்தை திமுக தலைவர் ஸ்டாலின் நடத்தினார்.

கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், விசிக தலைவர் திருமாவளவன், மமக கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, கொமதேக மாநிலச் செயலாளர் ஈஸ்வரன், முஸ்லிம் லீக், தி.க.தலைவர்கள் மற்றும் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச் செயலாளர் பொன்முடி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதில் மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களைக் கண்டித்தும், மாநில அரசு அதை ஆதரிப்பதைக் கண்டித்தும், சட்டத்தைத் திரும்பப் பெறவும் வலியுறுத்தப்பட்டது. புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்தும், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் திமுக உள்ளிட்ட தோழமைக் கட்சிகள் சார்பாக மாநில, மாவட்ட, நகர, ஒன்றியங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி இன்று காலை தமிழகம் முழுவதும் வேளாண் சட்டங்களை எதிர்த்து திமுக அதன் தோழமைக் கட்சிகளுடன் மாவட்ட, நகரத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது. திமுக தலைவர் ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார். சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், திமுக எம்.பி. தயாநிதி மாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கடலூரில் விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்.கே.நகரில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, திமுக எம்.பி.க்கள் கலாநிதி வீராசாமி, வில்சன் உள்ளிட்டோரும், வள்ளுவர் கோட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மற்ற தலைவர்கள் தமிழகம் முழுவதும் கலந்துகொண்டனர். தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் இப்போராட்டத்தில் கலந்துகொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in