அதிமுக செயற்குழுக் கூட்டம் கூடியது: 15 தீர்மானங்கள் நிறைவேற்றம்

அதிமுக செயற்குழுக் கூட்டம் கூடியது: 15 தீர்மானங்கள் நிறைவேற்றம்
Updated on
1 min read

சென்னையில் அதிமுகவின் செயற்குழுக் கூட்டம் இன்று காலை அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் கூடியது. கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. பெரும்பாலானவை மத்திய அரசுக்கு எதிராக உள்ளன.

சமீபத்தில் நடந்த அதிமுக தலைமை நிர்வாகிகள் கூட்டத்தில் பல்வேறு கருத்து மோதல்கள் எழுந்தன. முதல்வர் வேட்பாளர், கட்சியின் பொதுச் செயலாளர் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து காரசார விவாதங்கள் நடந்தன. 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு மற்றும் சசிகலா விடுதலை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் அலசப்பட்டது.

இதையடுத்து முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தி, செப்.28-ம் தேதி செயற்குழுக் கூட்டத்தை நடத்துவது என அறிவிக்கப்பட்டது. செயற்குழு என்பது பொதுக்குழுவுக்கு முந்தைய பெரிய அளவிலான கட்சிக்கு உள்ளடங்கிய அமைப்பு ஆகும், ஆகவே செயற்குழுக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இன்று காலை செயற்குழு தொடங்குவதை ஒட்டி, ஓபிஎஸ், இபிஎஸ் இல்லம் அமைந்துள்ள கிரீன்வேஸ் சாலை தொண்டர்களால் அமர்க்களப்பட்டது. பேண்டு வாத்தியம், பூரண கும்ப மரியாதை, தொண்டர்கள் அணிவகுப்பு எனப் பரபரப்பாகக் காணப்பட்டது. இந்நிலையில் காலை 10 மணிக்கு அதிமுக செயற்குழுக் கூட்டம் கட்சித் தலைமை அலுவலகத்தில் அவைத் தலைவர் இ.மதுசூதனன் தலைமையில் தொடங்கியது.

கூட்டத்துக்கு முன் அமைச்சர்கள் சிலர் முதல்வர் பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தினர். பின்னர் கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இருமொழிக் கொள்கை, நீட் தேர்வைக் கைவிட வேண்டும், ஜிஎஸ்டி தொகையை வழங்க வேண்டும், கலாச்சார ஆய்வுக் குழுவில் தமிழ் அறிஞர்களைச் சேர்க்க வேண்டும், கச்சத்தீவு மீட்பு, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு என மத்திய அரசுக்கு வேண்டுகோள் வைக்கும் தீர்மானங்கள் இயற்றப்பட்டன.

தீர்மானத்திற்குப் பின்னர் தொடங்கிய கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை, துணை ஒருங்கிணைப்பாளர் உட்பட 7 நிர்வாகிகள் பேச அனுமதிக்கப்பட்டுள்ளனர். கூட்டத்தில் பரபரப்புக்குப் பஞ்சம் இருக்காது என அதிமுக வட்டாரத் தகவல் தெரிவிக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in