

முதல்வர் ஜெயலலிதா 2011-ல் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன் பல்வேறு ஊர்களில் திமுகவுக்கு எதிரான பொதுக்கூட்டங்களில் பேசினார்.
மதுரை தேர்தல் கூட்டத்தில் அவர் பேசியபோது, கவுன்சிலர் லீலாவதி கொலை வழக்கு, நாளிதழ் எரிப்பு உட்பட பல முக்கிய வழக்குகளில் ரவுடிகளின் செயல்பாட்டை விவரித்தார். அப்போது, அவர் வாசித்த ரவுடிகளின் பட்டியலில் முதலிடத்தை பெற்றது அட்டாக் பாண்டிதான். அவரது பெயரைக் குறிப்பிட்டதும் கூட்டத்திலிருந்து பலத்த கரகோஷம் எழுந்தது.
முதல்வர் தெரிவித்த மதுரை ரவுடி களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள அட்டாக் பாண்டி மீது நாளிதழ் எரிப்பு வழக்கு, ஜெயம் நிதி நிறுவன உரிமை யாளர் அசோக்கை கடத்திய வழக்கு, பொட்டு சுரேஷ் கொலை, வில்லாபுரத்தில் வீட்டை அபகரித்த வழக்கு உட்பட 30 வழக்குகள் உள்ளன.
திமுக ஆட்சியில் வேளாண் விற்பனைக் குழு தலைவராகப் பதவி கிடைத்ததும் அட்டாக் பாண்டியின் செல்வாக்கு அதிகரித்தது. அழகிரியின் நெருக்கத்தைப் பயன்படுத்தி, பல்வேறு காரியங்களை சாதித்தார். தினகரன் நாளிதழ் எரிப்பு வழக்கிலிருந்து விடுதலையானார். அதிமுக ஆட்சியில் முக்கிய வழக்கில், தற்போதுதான் முதல்முறையாக சிக்கியுள்ளார். அட்டாக் பாண்டி கைதாகியுள்ளதால், ஓரிரு மாதங்களிலேயே பொட்டு சுரேஷ் வழக் கில் குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக் கல் செய்யப்பட்டுவிடும் என்பதால் ஜாமீன் கிடைப்பதற்கான வாய்ப்பு குறைவு.
காட்டிக்கொடுத்த போன்
அட்டாக் பாண்டியை பிடிக்க போலீ ஸார் பலமுறை முயற்சித்தும் சிக்க வில்லை. ஒரு ரூபாய் நாணயத்தை பயன்படுத்தி, பொது தொலைபேசி மூலமே பேசியுள்ளார். அந்த இடத்தை அறிந்து நெருங்குவதற்குள், அடுத்த மாநிலத்துக்கே சென்றுவிடுவாராம். செல்பேசியில் பேசுவதை முற்றிலும் தவிர்த்துள்ளார்.
சென்னை, பெங்களூரு, மும்பை, கோவா என பல ஊர்களுக்கு தொடர்ந்து இடம் மாறியுள்ளார். மதுரை தனிப்படைக்கு பெரும் சவாலாக இருந்ததால், வழக்கை ஒருங்கிணைந்த குற்றப்பிரிவு போலீஸார் கண்காணிக்க உத்தரவிடப்பட்டது.
இப்பிரிவின் எஸ்.பி. சரவணன் தலைமையில் கடந்த ஒன்றரை ஆண்டு களாக மாநிலம் முழுவதும் தனிப்படை அமைத்து ரகசியமாக கண்காணித் தனர்.
தற்போது, மும்பையில் அட்டாக் பாண்டி இருப்பதை அவரிடமிருந்து வந்த போன் மூலம் ஒருங்கிணைந்த குற்றப்பிரிவு போலீஸார்தான் உறுதிப்படுத்தினர். உடனே மும்பை போலீஸார் துணையோடு, அட்டாக் பாண்டியின் இருப்பிடத்தை கண்டறிந்துள்ளனர். அதன் பின்னரே மதுரை துணை ஆணையர் சமந்த் ரோஹன் ராஜேந்திரா தலைமையிலான தனிப்படை அவரை சுற்றி வளைத்து கைது செய்துள்ளது.