சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க குமரிக்கு புதிதாக வந்துள்ள நவீன சொகுசு படகு ‘திருவள்ளுவர்’ சோதனை ஓட்டம்

பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு இல்லத்துக்கு கோவாவில் இருந்து வந்துள்ள புதிய நவீன சொகுசு படகு.
பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு இல்லத்துக்கு கோவாவில் இருந்து வந்துள்ள புதிய நவீன சொகுசு படகு.
Updated on
1 min read

கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளை விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலைக்கு அழைத்துச் செல்ல நவீன சொகுசு படகு ‘திருவள்ளுவர்’ கோவாவில் இருந்து வந்துள்ளது. இதன் சோதனை ஓட்டம் நேற்று நடந்தது.

கரோனா ஊரடங்கிற்கு பின்னர் கன்னியாகுமரியில் 6 மாதமாக படகு போக்குவரத்து நடைபெறவில்லை. சுற்றுலா மையங்கள் முறையாக திறக்கப்படாத நிலையிலும், இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். ஆனால், முதன்மையான பொழுதுபோக்கு அம்சமான படகு சேவையை தொடங்கினால் மட்டுமே மீண்டும் கன்னியாகுமரி களைகட்டும்.

தாமிரபரணி, திருவள்ளுவர்

பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் விவேகானந்தா, பொதிகை, குகன் ஆகிய 3 படகுகள் ஏற்கெனவே விவேகானந்தர் பாறை, திருவள் ளுவர் சிலைக்கு இயக்கப்பட்டு வருகின்றன. கோடை சீஸன், பண்டிகை விடுமுறை தினங்கள், சபரிமலை சீஸன் நாட்களில் கன்னியாகுமரியில் லட்சத்திற்கும் மேற்பட்டோர் குவிவர். ஆனால் நாள் ஒன்றுக்கு அதிகபட்சம் 16 ஆயிரம் பேர் மட்டுமே படகு சவாரி மேற்கொள்ள முடியும்.

படகு தளத்தை விரிவுபடுத்தி கூடுதலாக படகுகளை இயக்க வேண்டும் என, பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து கூடுதலாக இரு நவீன சொகுசு படகுகளை இயக்க பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் மூலம் தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. தலா ரூ.4.25 கோடி மதிப்பிலான இரு சொகுசு படகுகள் கோவாவில் தயார் செய்யப்பட்டன. இதில் எம்.எல்.தாமிரபரணி என்ற சொகுசு படகு ஏற்கெனவே கன்னியாகுமரி கொண்டுவரப்பட்டு, படகு தளத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

5-வது படகான எம்.எல்.திருவள்ளுவர் என்ற புதிய நவீன சொகுசு படகு தற்போது கோவாவில் இருந்து கன்னியாகுமரி படகு இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. குளிரூட்டப்பட்ட வசதி கொண்ட இந்த படகில் 138 சாதாரண இருக்கைகள், 12 குளிர்சாதன வசதியுடன் கூடிய இருக்கைகள், அலங்கார தரைவிரிப்புகள், எல்.இ.டி. தொழில்நுட்ப வசதி, பேரிடர் மீட்பு உபகரணங்கள், நவீன மிதவைகள் அடங்கிய வசதிகள் உள்ளன. புதிதாக வந்த திருவள்ளுவர் சொகுசு படகின் சோதனை ஓட்டம் நேற்று நடந்தது. படகு தளத்தில் விரிவாக்க பணிக்கான வேலைகள் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தாலும், புதிய படகின் வெள்ளோட்டத்தால் கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு இல்லம் களைகட்டியது.

5 படகுகளும் இயங்கும்

“ஊரடங்கு காலம் முடிந்து சுற்றுலா பயணிகளை விவேகான ந்தர் பாறை, திருவள்ளுவர் சிலைக்கு அழைத்துச் செல்வதற் கான அனுமதி கிடைத்ததும் திருவள்ளுவர், தாமிரபரணி ஆகிய இரு சொகுசு படகுகளின் சேவையும் தொடங்கும். இதனால் சீஸன் நேரத்தில் 5 படகுகள் இயக்கப்படும்” என, பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக கன்னி யாகுமரி மேலாளர் பிச்சையா தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in