சேலம் மாவட்டத்தில் நடந்த கிசான் திட்ட மோசடியில் 1,200 பேர் வெளிமாநிலத்தினர்

சேலம் மாவட்டத்தில் நடந்த கிசான் திட்ட மோசடியில் 1,200 பேர் வெளிமாநிலத்தினர்
Updated on
1 min read

நலிந்த விவசாயிகளுக்கு உதவித் தொகை வழங்கும் பிரதமரின் கிசான் திட்ட மோசடியில், சேலம் மாவட்டத்தில் பணம் பெற்றவர்களில் 1,200 பேர் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

விவசாயிகளுக்கு உதவித் தொகை வழங்கும் பிரதமரின் கிசான் திட்டத்தில் தமிழகம் முழுவதும் நிலமற்ற பலர் மோசடியாக சேர்ந்து பல கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக தமிழகம் முழுவதும் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் மாவட்டத்தில் உதவித்தொகை பெற்ற தகுதியற்ற 10,600 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு, அவர்கள் மோசடியாக பெற்ற உதவித்தொகையை வசூல் செய்யும் பணியில் வேளாண் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

சேலம் மாவட்டத்தில் மோசடி தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் 51 பேர் மீது வழக்குப் பதிவு செய்து பெத்தநாயக்கன் பாளையம் வட்டார வேளாண் உதவி அலுவலர் அன்பழகன், அதே அலுவலகத்தில் தினக்கூலி அடிப்படையில் பணிபுரிந்த ஓட்டுநர் பிரகாஷ் மற்றும் கணினி மையத்தைச் சேர்ந்த 2 பேர் உள்ளிட்டவர்களை கைது செய்துள்ளனர். கைது நடவடிக்கையை தொடர்ந்து வட்டார வேளாண் உதவி அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதனிடையே, சேலம் மாவட்டத்தில் மோசடியாக உதவித்தொகை பெற்றவர்களில் 1,200-க்கும் மேற்பட்டோர் வெளிமாநிலங்களில் வசிப்பதும், வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.

இதுதொடர்பாக வேளாண் துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது:

சேலம் மாவட்டத்தில் கிசான் திட்டத்தில் உதவித்தொகையை மோசடியாக பெற்றவர்களில் 1,200-க்கும் மேற்பட்டவர்கள் பிஹார், கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் வேலைவாய்ப்புக்கு சென்றவர்கள் என்பதும் பலர் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பது கண்டறியப் பட்டுள்ளது. அவர்கள் மோசடியாக பெற்ற உதவித்தொகையை அந்தந்த மாநில நிர்வாகம் மூலம் திரும்பப்பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

உதவித்தொகை திட்டத்தில் ஆன்லைனில் பதிவு செய்யும் மென்பொருளில் விவசாயிகள் வழங்கும் நில ஆவணத்தின் உண்மைத் தன்மையை கண்டறிய எவ்வித வாய்ப்பும் இல்லை. விவசாயிகள் என்று கூறிக் கொண்டு ஆதார் எண் மற்றும் வங்கிக் கணக்கை கொடுத்தவர்களுக்கு சேவை மையங்களில் பதிவு செய்து கொடுத்துள்ளனர்.

இதை வேளாண் துறை அலுவலர்களும் ஆய்வு செய்யாமல் அப்படியே ஏற்றுக் கொண்டு, உதவித்தொகை திட்டத்தில் சேர்ந்துள்ளனர். மேலும், வேளாண் துறையைச் சேர்ந்த சிலர் மோசடியிலும் ஈடுபட்டிருக்க வாய்ப்பு உள்ளது. மோசடியாக உதவித்தொகை பெற்றவர்களிடம் இருந்து இதுவரை ரூ.3 கோடி வரை வசூலிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in