

பணத்துக்காக ஆட்களை கடத்துதல் உட்பட பல்வேறு குற்றச் சம்பவங்களில் தொடர்புடைய 3 பேர்கொண்ட கும்பலை அவிநாசிபோலீஸார் நேற்று கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் கொடுமுடி பகுதியை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (38). இவர், கேரளாவில் பொக்லைன் இயந்திர ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 23-ம்தேதி இரவு கோவை மாவட்டம் அன்னூரில் பணிபுரியும் நண்பர்கள் முத்துச்சாமி (49), கார்த்தி (26) ஆகியோரை காரில் அழைத்துக் கொண்டு, சொந்த ஊரான கொடுமுடி சென்று கொண்டிருந்தார். காரை கார்த்தி ஓட்டியுள்ளார். அவிநாசி அருகே முன்னால் சென்ற காரை முந்திச் செல்ல முற்பட்டுள்ளனர். அப்போது இருதரப்பினரிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில், மற்றொரு காரில்வந்தவர்கள் இவர்களின் காரை முந்திச் சென்று குறுக்கே நிறுத்தினர்.இதில் இருந்து இறங்கிய 3 பேர், தட்சிணாமூர்த்தி கையில் கத்தியால் வெட்டி விட்டு தப்பிச் சென்றனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் அவிநாசி காவல் துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். 50-க்கும் மேற்பட்ட சாலையோரகடைகளில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், சம்பவத்தில் தொடர்புடையவர்கள் பயன்படுத்திய காரின் அடையாளம் கண்டறியபட்டது.தேடப்பட்ட கார், அவிநாசியை அடுத்த செங்காளிபாளையம் அருகே நேற்று முன்தினம் செல்வதை காவலர் ஒருவர் பார்த்துள்ளார். தகவலின்பேரில், அவிநாசி சரக துணைக் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கர் தலைமையில் காவல் ஆய்வாளர்கள் அருள், பிரேமா உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படையினர், கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலை அவிநாசியை அடுத்த பழங்கரை அருகே காரை விரட்டி பிடித்தனர். காரில் இருந்த 3 பேரை பிடித்து விசாரித்ததில், திருப்பூர் ராயபுரத்தில் வசிக்கும் கேரள மாநிலம் கஞ்சிக்கோடு பகுதியைச் சேர்ந்த என்.மதன் (எ) முகமது சபீர் (29), பல்லடம் பகுதியைச் சேர்ந்த ஏ.மனோஜ் (30), திருப்பூர் கே.என்.பி.காலனி பகுதியைச் சேர்ந்த பி.மர்ஜித் (30) ஆகியோர் என்பது தெரியவந்தது. இவர்களை கைது செய்த காவல் துறையினர், காருடன் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து காவல் துறையினர் கூறும்போது, "திருப்பூர், பல்லடம், மதுரை உட்பட பல்வேறு பகுதிகளில், முகமது சபீர் மீது கொலை, ஆள்கடத்தல் உட்பட 20-க்கும் மேற்பட்ட வழக்குகளும், மனோஜ் மீது 6-க்கும் மேற்பட்ட ஆள்கடத்தல்வழக்குகளும் உள்ளன.
ஏற்கெனவே, இருவரும் காவல் துறையினரால் தேடப்பட்டு வந்தவர்கள். மர்ஜித் மீது வேறு எந்த வழக்குகளும் இல்லை.
நேற்று முன்தினம்கூட, கோவை மாவட்டம் சோமனூர் பகுதியைச் சேர்ந்த கார்த்தி என்ற தொழிலதிபரை, பணத்துக்காக கடத்தியுள்ளனர். இவர்களிடமிருந்து அவர் தப்பிச் சென்று, கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்" என்றனர்.