

ஆழியாறு அருகே தடை செய்யப்பட்ட தடுப்பணைப் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நேற்று குவிந்தனர். உயிரிழப்புக்கு முன்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாக ஆழியாறு அணையில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. தற்போது ஆழியாறு அணையிலிருந்து ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டதால், பள்ளிவிளங்கால் தடுப்பணை நிரம்பி, ஆற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. நேற்று ஒரேநேரத்தில் 200-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் தடுப்பணையில் குவிந்தனர். புதைமணல், நீர்ச் சுழல்கள் நிறைந்த இந்தப் பகுதியில் தடையை மீறி குளிக்கும் சுற்றுலாப் பயணிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறும்போது, ‘‘வெளியூரில் இருந்து ஆற்றுப்பகுதிக்குவரும் சுற்றுலாப் பயணிகளில், பெரும்பாலானோர் மது போதையிலும், குளிக்கும் ஆசையிலும், நீச்சல் பழகும் ஆர்வத்திலும் ஆற்றில் இறங்கி உயிரிழக்கின்றனர். இங்கு குளிப்பது தடை செய்யப்பட்டுள்ளது என்பதை சுற்றுலாப் பயணிகள் அறிந்துகொள்ளும் வகையில், எச்சரிக்கைப் பலகைகளை வைக்கவேண்டும். தடுப்பணைப் பகுதிக்குள் நுழைவோரை தடுத்து நிறுத்தவேண்டும். போலீஸார் முறையாக கண்காணிப்பு மேற்கொண்டு, சுற்றுலாப் பயணிகளை கட்டுப்படுத்தி உயிரிழப்புகள் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும்’’ என்றனர்.