Last Updated : 28 Sep, 2020 08:44 AM

 

Published : 28 Sep 2020 08:44 AM
Last Updated : 28 Sep 2020 08:44 AM

அரசு நிர்ணயித்த தொகையை விட அதிக விலைக்கு உரம் விற்றால் நடவடிக்கை: மாநில, மாவட்ட அளவில் கண்காணிக்க குழு அமைப்பு

சென்னை

நிர்ணயிக்கப்பட்டதைவிட அதிக விலைக்கு உரம் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக வேளாண் துறை எச்சரித்துள்ளது. உர விற்பனையில் முறைகேடு நடக்காமல் தடுக்க, மாநில, மாவட்ட அளவில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை பரவலாக பொழிந்துள்ளதால், டெல்டா மாவட்டங்கள் உட்பட பல்வேறு மாவட்டங்களிலும் சம்பா சாகுபடி பணி தீவிரமடைந்துள்ளது. இதற்கு தேவையான உரங்கள், உர நிறுவனங்கள் மூலம் விநியோகம் செய்யப்படுகின்றன. இதற்காக யூரியா, டிஏபி, பொட்டாஷ், காம்ப்ளக்ஸ் ஆகிய உரங்களை போதிய அளவு இருப்பு வைக்க தமிழக வேளாண் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

நிர்ணயிக்கப்பட்ட விலையில் உரங்கள் விற்கப்படுவதை உறுதி செய்ய மாநில, மாவட்ட அளவில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து உரக் கடைகளிலும் உர வகைகளின் விலைப் பட்டியலைவைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒரு மூட்டை யூரியா அதிகபட்ச சில்லறை விலை ரூ.266.50, நிறுவனங்களுக்கு ஏற்ப டிஏபி உரம் விலை ரூ.1,200 முதல் ரூ.1,350 வரை, பொட்டாஷ் விலை ரூ.875 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மூட்டையில் அச்சிடப்பட்டதைவிட அதிக விலைக்கு விற்பவர்கள் மீது உரக் கட்டுப்பாட்டு ஆணை 1985-ன் படி நடவடிக்கைஎடுக்கப்படும் என்று வேளாண்மைதுறை எச்சரித்துள்ளது. உரம்அதிக விலைக்கு விற்கப்பட்டால், சம்பந்தப்பட்ட விற்பனையாளர் பற்றி அந்தந்த மாவட்ட வேளாண்மை துறை இணை இயக்குநர்கள், உதவி இயக்குநர்(தகவல், தரக் கட்டுப்பாடு) ஆகியோரிடம் புகார் அளிக்கலாம்என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாகப்பட்டினம் இணை இயக்குநர் (9789225757), உதவி இயக்குநர் (8825949002), தஞ்சாவூர் இணை இயக்குநர் (9360557743), உதவி இயக்குநர் (9442403857), திருவாரூர் இணை இயக்குநர் (7397753311), உதவிஇயக்குநர் (9443717230) ஆகியோரை செல்போனில் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால் சம்பந்தப்பட்ட விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண் துறை தெரித்துள்ளது.

இதுகுறித்து வேளாண் அதிகாரிகள் கூறும்போது, ‘‘தற்போது 86,330 டன் யூரியா, 66,960 டன் டிஏபி, 68,740 டன் பொட்டாஷ், 1.53 லட்சம் டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் உள்ளன. அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தனியார் மற்றும் கூட்டுறவுஉர விற்பனை நிலையங்களில் இவை இருப்பு வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூரில் 22,190 டன்,திருவாரூரில் 14,020 டன், நாகப்பட்டினத்தில் 9,860 டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x