

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடக்கிறது. காஞ்சிபுரத்தில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.
வேளான் தொடர்பான 3 சட்டங்களையும் திரும்பப்பெற வலியுறுத்தியும், அதற்கு துணைபோன அதிமுகஅரசைக் கண்டித்தும் செப்டம்பர்28-ம் தேதி மாவட்டத் தலைநகரங்கள், நகராட்சிகள், ஒன்றியங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று கடந்த 21-ம் தேதி சென்னையில் நடந்த திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி, தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி கட்சிகள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்துகின்றன. காஞ்சிபுரத்தை அடுத்த கீழம்பி கிராமத்தில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், காஞ்சிபுரம் மக்களவை தொகுதி உறுப்பினர் ஜி.செல்வம், எம்எல்ஏ எழிலரசன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
சென்னை கொருக்குப் பேட்டையில் தமிழக காங்கிரஸ் தலைவர்கே.எஸ்.அழகிரி, வட சென்னைமாவட்ட திமுக செயலாளர் மாதவரம் சுதர்சனம் உள்ளிட்டோரும் கந்தன்சாவடியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோரும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கின்றனர். சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், கும்பகோணத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் பங்கேற்கின்றனர். தமிழகம் முழுவதும் 300-க்கும்அதிகமான இடங்களில் ஆர்ப்பாட்டம் நடக்க இருப்பதாக திமுக நிர்வாகிகள் தெரிவித்தனர்.