Published : 28 Sep 2020 08:39 AM
Last Updated : 28 Sep 2020 08:39 AM

சி.பா.ஆதித்தனாரின் 116-வது பிறந்த தினம்: அரசு சார்பில் அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை

சி.பா.ஆதித்தனாரின் 116-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, தமிழக அரசு சார்பில் டி.ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள், ஆதித்தனாரின் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

‘தமிழர் தந்தை’ என்று அழைக்கப்படும் சி.பா.ஆதித்தனாரின் 116-வது பிறந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு தமிழக அரசு சார்பில், சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த படத்துக்கு அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், பா.பெஞ்சமின், கே.பாண்டியராஜன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழக தலைவர் பா.வளர்மதி மலர்தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் செய்தித் துறை செயலர் மகேசன் காசிராஜன், செய்தித் துறை இயக்குநர் பொ. சங்கர் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

இதேபோல், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் பி.வெற்றிவேல் மற்றும் நிர்வாகிகள் ஆதித்தனார்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் மரியாதை செலுத்தினர்.

சி.பா.ஆதித்தனாரை நினைவுகூர்ந்து தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், பாமகநிறுவனர் ராமதாஸ், பாரிவேந்தர்,எம்பி ஆகியோர் வெளியிட்ட அறிக்கைகளில் கூறியிருப்பதாவது:

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: எளிய பத்திரிகை பதிப்பின் மூலம் அரசியலை பாமர மக்களின் மனதில்பதிய வைத்தவர். கடுமையான உழைப்புக்கு உதாரணமாக திகழ்பவர். சி.பா.ஆதித்தனாரின் 116- வது பிறந்த நாளில் அவரது நினைவை போற்றி வணங்குகிறேன்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: சி.பா.ஆதித்தனாரின் 116-வது நாள் பிறந்தநாள், அரசு விழாவாக இன்று கொண்டாடப்படும் நிலையில் அவரது சாதனைகளை நினைத்து மகிழ்கிறேன். இதழியல் துறையில் அவர் படைத்த சாதனைகள் இனிவரும் பல தலைமுறைகளுக்கு பாடமாக விளங்கும்.

பாரிவேந்தர் எம்பி: பாமர மக்களும் சமூக நிகழ்வுகளை அறிந்து கொள்ளும் வகையில், எளிய தமிழில் செய்திகளை வழங்கிய பண்பாளரும், தமிழ் செய்தித்தாள் சேவையின் முன்னோடியும், சட்டப்பேரவை முன்னாள் தலைவருமான சி.பா.ஆதித்தனார் பிறந்த நாளில், அவரை வாழ்த்துவதில் பெருமை கொள்கிறேன். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x