Published : 28 Sep 2020 08:34 AM
Last Updated : 28 Sep 2020 08:34 AM

சென்னையில் 3 நாட்களாக அதிகரிக்கும் கரோனா தொற்று: அரசின் நெறிமுறைகளை கடைபிடிக்க சுகாதாரத் துறை அறிவுறுத்தல்

சென்னையில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த 3 நாட்களாக 1000-க்கு மேல் பதிவாகி வருகிறது.

சென்னையில் கரோனா தொற்று பாதிப்பு கடந்த ஒரு மாதமாக 1000-க்கும்கீழ் பதிவாகி வந்தது. இந்நிலையில் கடந்த 24-ம் தேதி 1,089, 25-ம் தேதி 1,193, 26-ம் தேதி 1,187 என கடந்த 3 நாட்களாக 1000-க்கு மேல் பதிவாகி வருகிறது. இதற்கு ஊரடங்கு தளர்வு வழங்கப்பட்டதும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

கடந்த 3 நாட்களாக கரோனா தொற்றுஅதிகரித்திருப்பது தொடர்பாக ஆய்வுசெய்து வருகிறோம். குறிப்பாக அண்ணா நகர், கோடம்பாக்கம், அம்பத்தூர், வளசரவாக்கம், அடையார், தேனாம்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர் ஆகிய மண்டலங்களில்தான் தற்போது தொற்று அதிகமாக உள்ளது.சராசரியாக தினமும் 12 ஆயிரம் பரிசோதனை மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 13 ஆயிரத்துக்கு மேல் பரிசோதனைகளை அதிகரித்திருக்கிறோம்.

தற்போது சுமார் 450 காய்ச்சல் பரிசோதனை முகாம்களை நடத்தி வருகிறோம். மேற்கூறிய மண்டலங்களில் காய்ச்சல் முகாம்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முகக்கவசம் அணியாதது, வணிக நிறுவனங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்காதது போன்றவற்றுக்காக அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. தற்போது வரை ரூ.2 கோடிக்கு மேல் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதையும் தீவிரப்படுத்த இருக்கிறோம். இதன்மூலம் சென்னையில் கரோனா தொற்று பரவல் தடுக்கப்படும்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள்கூறும்போது, “பொதுமக்கள் அனைவருக்கும் கரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்வது தொடர்பாக போதுமான விழிப்புணர்வை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், பொது இடங்களில் பலர் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் உள்ளனர். இதனால்தான் சென்னையில் தற்போது தொற்று அதிகரிக்கிறது. இதற்கு பொதுமக்களின் அலட்சியமே காரணம். இதுபோன்ற காலங்களில் இறுதிச் சடங்கு மற்றும் மக்கள் கூடும்படியான நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே தமிழகத்திலிருந்து கரோனாவை விரட்ட முடியும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x