

ரேபீஸ்-க்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்த லூயி பாஸ்டர் மறைந்த தினமான செப்.28-ம் தேதியை அவரது நினைவாக 2007-ம் ஆண்டு முதல் சர்வதேச ரேபீஸ் தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது.
ரேப்டோ எனும் வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வைரஸ் நோய் தான் ரேபீஸ். இது நாய், பூனை, குதிரை, வவ்வால் போன்றவற்றைத் தாக்கும். அதன்மூலம் மனிதருக்கும் பரவும்.
ரேபீஸ் எனும் வைரஸ் கிருமி கள் வெறி நாயின் எச்சிலில் இருந்து வெளியேறும். அந்த நாய் மனித ரைக் கடிக்கும்போது, கிருமிகள் உடலுக்குள் புகுந்து, மூளைத் திசுக்களை அழித்து ரேபீஸ் நோயை உண்டாக்கும். வெறி நாய் சிறிய அளவில் பிராண்டினாலும், திறந்த உடல் காயங்களில் நாவினால் தீண் டினாலும் இந்த நோய் வரலாம்.
வெறி நாய் கடித்த 5 நாட்களுக் குப் பிறகு 6 ஆண்டுகளுக்குள் எப் போது வேண்டுமானாலும் அறிகுறிகள் தொடங்கலாம். காய்ச்சல், வாந்தி, தலைவலி வரும். சாப்பிட முடியாது. தண்ணீரைக் கண்டாலே பயப்படுவர். வலிப்பு வந்து, சுவாசம் நின்று உயிரிழப்பு ஏற்படும்.
5 - 15 வயதுக்கு உட்பட்ட குழந் தைகள்தான் அதிகம் வெறிநாய்க் கடியால் பாதிக்கப்படுகின்றனர். இக்குழந்தைகளுக்கு நாய்களிடம் பழகும் முறை, ரேபீஸ் நோய் உள்ள நாய், பூனையை அடையாளம் கண்டறிதல், தடுப்பூசி போடுதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இந்தியாவில் 20 ஆயிரம் பேர்
இதுகுறித்து மதுரை அருகே உள்ள கொந்தகை அரசு கால்நடை மருத்துவர் உ.மோகன்தாஸ் கூறும்போது, ‘‘ஆண்டுதோறும் ரேபீஸ் நோயால் உலக அளவில் 59 ஆயிரம் பேரும், இந்தியாவில் 20 ஆயிரம் பேரும் உயிரிழக்கின்றனர். மொத்த உயிரிழப்பில் 45 சதவீதம் இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் நிகழ்வதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
உலகில் இருந்து 2030-க்குள் ரேபீஸை விரட்டிவிட வேண்டும் என்ற குறிக்கோளை உலக சுகாதார நிறுவனம் முன்வைத்துள்ளது. எனவே ரேபீஸ் நோய் பாதித்த நாயால் கடிபட்ட ஒரு மனிதனை, விலங்குகளை காப்பாற்ற ரேபீஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்’’ என்றார்.