Last Updated : 27 Sep, 2020 04:50 PM

 

Published : 27 Sep 2020 04:50 PM
Last Updated : 27 Sep 2020 04:50 PM

அதிமுக செயற்குழுவில் என்ன முடிவெடுத்தாலும் தொண்டர்கள் ஏற்க வேண்டும்: அமைச்சர் செல்லூர் ராஜூ வேண்டுகோள்

அதிமுக செயற்குழுவில் என்ன முடிவெடுத்தாலும் தொண்டர்கள் ஏற்று கட்சிப் பணியாற்ற வேண்டும் என அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கேட்டுக்கொண்டுள்ளார்.

மதுரையில் அதிமுக நிர்வாகிகள், பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ இன்று (செப். 27) ஆலோசனை நடத்தினார்.

இதில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:

"வரும் தேர்தலில் தகவல் தொழில்நுட்பம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். முகநூல், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மக்கள் மத்தியில் வேகமாகப் பரவி வருகின்றன. இதனால் சமூக வலைதளங்களில் கட்சிகள் பிரச்சாரம் செய்கின்றன.

திமுகவில் கட்சியின் மூத்த நிர்வாகிகளின் ஆலோசனைக்கு மு.க.ஸ்டாலின் மதிப்பு கொடுப்பதில்லை. இதனால் பிராசாந்த் கிஷோர் மூலமாக சமூக வலைதளங்களில் திமுக பிரச்சாரம் செய்து வருகிறது. கட்சியினரின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் சமூக வலைதளப் பிரச்சாரத்தை ஸ்டாலின் செய்து வருகிறார்.

திமுகவில் கட்சிக்கு சம்பந்தம் இல்லாத ஒருவரை வைத்து மேற்கொள்ளும் தேர்தல் பணியை மக்கள் ஏற்கமாட்டார்கள். மக்கள் தீவிர ஆய்வுக்குப் பிறகே தேர்தலில் வாக்களிப்பர். அதிமுகவில் மக்களைச் சந்திக்க வெளி மாநிலத்தவரின் உதவி தேவையில்லை. மக்களிடம் அரசின் திட்டங்களை எடுத்துச் சொல்லி ஓட்டு கேட்டாலே தேர்தலில் வெற்றி பெறலாம்.

தமிழகத்தில் நடப்பவை எல்லாம் மக்களுக்குத் தெரியும். திமுகவின் அவலங்களை மக்கள் இன்னும் மறக்கவில்லை. முதல்வருக்குச் சற்றும் குறையாமல் துணை முதல்வரும் அதிமுக அரசை வெற்றி பெற வைக்க உழைத்துக் கொண்டிருக்கிறார். தமிழகத்தில் முதல்வர், துணை முதல்வர் தலைமையில் மிகச் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 3-வது முறையாகத் தொடர்ந்து வெற்றி பெற்று நிச்சயம் ஆட்சியமைக்கும்.

அதிமுக தொண்டர்கள் கட்சி நிர்வாகிகளின் கருத்துகளை ஏற்றுப் பணிபுரிந்து வருகின்றனர். அதிமுக செயற்குழுவில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். எந்த முடிவாக இருந்தாலும் அதனைத் தொண்டர்கள் ஏற்று கட்சிப் பணியாற்ற வேண்டும்.

தமிழக அரசுக்கு எதிராக ஸ்டாலின் கூறும் கருத்துகளை மக்களும், இளைஞர்களும் பார்ப்பதும் இல்லை, படிப்பதும் இல்லை. கடைசி வரை ஸ்டாலின் ஆசை நிறைவேறாத ஆசையாக முடியும்.

இந்தியாவின் சிறந்த நிர்வாகியாகவும், மனதில் பட்டதைப் பேசுபவராகவும் பிரதமர் மோடி உள்ளார். அவர் தமிழக முதல்வரைப் பாராட்டியுள்ளார். இதை எதிர்க்கட்சிகளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. குறை சொல்பவர்கள் குறைகளைச் சொல்லிக்கொண்டேதான் இருப்பார்கள். அவர்களைத் திருத்தவே முடியாது".

இவ்வாறு அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x