கால்நடைப் பராமரிப்புத் துறையில் எழுத்துத் தேர்வு மூலம் உதவியாளர்களை நியமிக்க உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை: கோப்புப்படம்
உயர் நீதிமன்ற மதுரைக் கிளை: கோப்புப்படம்
Updated on
1 min read

கால்நடைப் பராமரிப்புத் துறையில் எழுத்துத் தேர்வு நடத்தி உதவியாளர்களைத் தேர்வு செய்யும் தனி நீதிபதியின் உத்தரவுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது.

தமிழகத்தில் கால்நடைப் பராமரிப்புத் துறையில் உதவியாளர் பணியிடங்கள் 2017-ம் ஆண்டு வரை வேலைவாய்ப்பு அலுவலகத்திலிருந்து தகுதியானவர்கள் பட்டியல் பெறப்பட்டு நிரப்பப்பட்டது. பின்னர், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி பொது விளம்பரம் செய்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வாய்மொழித் தேர்வு நடத்தி உதவியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில், கடந்த 2011-ல் தன்னை விட இளையவரான ரோசம்மாளுக்குப் பணி நியமனம் வழங்கியதை ரத்து செய்து, தனக்குப் பணி வழங்கக் கோரி மைக்கேல் அம்மாள் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, இனிவரும் காலங்களில் கால்நடைப் பராமரிப்பு உதவியாளர் பணியிடத்திற்கு வாய்மொழித் தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யக்கூடாது, எதிர்காலங்களில் 85 சதவீதப் பணியிடங்களை எழுத்துத் தேர்வு மூலமாகவும், 15 சதவீதப் பணியிடங்களை வாய்மொழித் தேர்வு நடத்தியும் நிரப்ப வேண்டும் என 2019-ல் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி கால்நடைப் பராமரிப்புத்துறை சார்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு இன்று (செப். 27) காணொலியில் விசாரித்தது. அப்போது, கால்நடைப் பராமரிப்பு உதவியாளர் பணியிடத்திற்கு எழுத்துத் தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யும் தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் விசாரணையை அக்.28-க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in