

தமிழக காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவுக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளதால், அவருடன் தொடர்பிலிருந்தவர்கள் கரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என, மக்களவை காங்கிரஸ் உறுப்பினர் திருநாவுக்கரசர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், கடந்த 24-ம் தேதி, இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக தமிழகத்துக்கு வருகை தந்தார். கட்சி நிர்வாகிகளுடன் சத்தியமூர்த்தி பவனில் அவர் ஆலோசனை நடத்தினார்.
தொடர்ந்து, மறுநாள் (செப். 25) அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்தார். இதையடுத்து, தமிழகத்தில் திமுக கூட்டணி வெற்றி பெற காங்கிரஸ் கடுமையாக உழைக்கும் என பேட்டியளித்தார்.
இந்நிலையில், தினேஷ் குண்டுராவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தினேஷ் குண்டுராவ் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “நான் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளேன். அதனால் அடுத்த 10 நாட்களுக்கு நான் என்னைத் தனிமைப்படுத்திக் கொள்ள இருக்கிறேன். என்னுடன் கடந்த சில நாட்களாக தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்திக் கொள்ளக் கேட்டுக்கொள்கிறேன். நான் அறிகுறியில்லாத கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளேன். நான் விரைவாக குணமடைய அனைவரின் வாழ்த்துகளையும் எதிர்நோக்குகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
தினேஷ் குண்டுராவுக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளதால், அவருடன் தொடர்பிலிருந்தவர்கள் கரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என, மக்களவை காங்கிரஸ் உறுப்பினர் திருநாவுக்கரசர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக இன்று (செப். 27) அவர் வெளியிட்ட அறிக்கையில், "தமிழக காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர், முன்னாள் அமைச்சர் தினேஷ் குண்டுராவ் எம்எல்ஏவுக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் தமிழகத்தில் அவரது இரண்டு நாள் சுற்றுப்பயணத்தின்போது நேரில் சந்தித்தவர்கள், நெருக்கமாகச் சென்று உரையாடியவர்கள், பழகியவர்கள், உடனிருந்தவர்கள் கரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டுமென காங்கிரஸ், திமுக தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்களை அன்போடு வேண்டி கேட்டுக்கொள்கிறேன்" என்று திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.