அதிமுக உறுப்பினர் பேச்சுக்கு எதிர்ப்பு: பேரவை தலைவரை முற்றுகையிட்ட திமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்

அதிமுக உறுப்பினர் பேச்சுக்கு எதிர்ப்பு: பேரவை தலைவரை முற்றுகையிட்ட திமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்
Updated on
1 min read

அதிமுக உறுப்பினரின் பேச்சை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வலியுறுத்தி, பேரவைத் தலைவர் இருக்கை முன்பு முற்றுகையிட்டு கோஷமிட்ட திமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர்.

சட்டப்பேரவையில் நேற்று இந்து சமய அறநிலையம், வனம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடந்தது. இதில் பேசிய அதிமுக உறுப்பினர் விஎன்பி வெங்கட்ராமன் (ஆலந்தூர்), எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்வது குறித்து குறிப்பிட்டு பேசினார்.

அப்போது, திமுக சட்டப் பேரவை குழு துணைத் தலைவர் துரைமுருகன் எழுந்து, திமுகவினரைப் பற்றி உறுப்பினர் பேசியதை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என பேரவைத் தலைவரிடம் வலியுறுத்தினார். அதற்கு பதிலளித்த பேரவைத் தலைவர் பி.தனபால், ‘உறுப்பினர் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. பொதுவாகத்தான் சொன்னார். அதை அவைக் குறிப்பில் இருந்து நீக்க முடியாது’ என்றார்.

ஆனால், திமுக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து, அதிமுக உறுப்பினரின் பேச்சை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என குரல் கொடுத்தனர். பேரவைத் தலைவரின் இருக்கை முன்பு முற்றுகையிட்டு கோஷமிட்டனர். இதனால், பேரவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. இருக் கைக்கு செல்லுங்கள் என பேரவைத் தலைவர் பலமுறை கூறியும் திமுகவினர் கேட்கவில்லை.

இதையடுத்து, அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக கூறி, திமுக உறுப்பினர்கள் அனைவரையும் அவையில் இருந்து வெளியேற்ற பேரவைத் தலைவர் உத்தர விட்டார். உடனே, பேரவைக் காவலர்கள் வந்து, திமுகவினரை வெளியேற்றினர்.

பேரவைக்கு வெளியே நிருபர்களிடம் துரைமுருகன் கூறும்போது, ‘‘திமுகவினர் குறித்து ஆளுங்கட்சி உறுப்பினர் கூறிய கருத்தை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என கூறினோம். ஆனால், அதை பேரவைத் தலைவர் ஏற்காமல், எங்களை வெளியேற்ற உத்தரவிட்டார். எதிர்க்கட்சிகளை பேச விடாமல் தடுப்பது ஜனநாயக விரோதப் போக்காகும். இதற்கு தேர்தலில் மக்கள் உரிய பாடம் புகட்டுவர்’’ என்றார்.

வெளிநடப்பு

முன்னதாக பேரவையில் நேற்று 110-விதியின் கீழ் முதல்வர் ஜெயலலிதா சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து ஒரு பிரச்சினை தொடர்பாக பேச துரைமுருகன் முயன்றார். அவர் கூறிய பிரச்சினை ஆய்வில் உள்ளதாக கூறிய பேரவைத் தலைவர், அனுமதி மறுத்தார். இதையடுத்து திமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.

இதேபோல அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச் சினைகள் தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானங்களை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளவில்லை எனக்கூறி பாமக, புதிய தமிழகம், மார்க்சிஸ்ட் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in