

புதுச்சேரியில் தரமற்ற சீன மீட்டர்களைப் பொருத்திய பிறகுதான் மின் கட்டணம் கூடுதலாக வருகிறது எனவும், மக்களைப் பாதிக்கும் மின் கட்டணச் சுமையைக் குறைக்கக் கோரி 30 தொகுதிகளிலும் மின் கட்டண மையங்களில் முற்றுகைப் போராட்டத்தை வரும் 29-ம் தேதி நடத்த உள்ளதாகவும் பாஜக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, புதுச்சேரி பாஜக மாநிலத் தலைவரும் எம்எல்ஏவுமான சாமிநாதன் இன்று (செப். 27) வெளியிட்ட அறிக்கை:
"கையில் பணமில்லாமல் மக்கள் துன்பப்படும் சூழலில் புதுச்சேரி மக்களைக் காங்கிரஸ் அரசு மின் கட்டணத்தின் பெயரால் கசக்கிப் பிழிகிறது. மாநில ஆட்சியாளர்களும், உயர் அதிகாரிகளும் ஒன்றுசேர்ந்து மக்களுக்கு எதிராக கூட்டுச் சதி செய்கிறார்கள்.
சிறு குடும்பம் வசிக்கும் வீட்டுக்கு ரூ.10 ஆயிரம் வரை மின் கட்டணம் வருகிறது. மிகச்சிறிய கடைக்கு ரூ.22 ஆயிரம் கட்டணம் வந்துள்ளது. இதைக் கட்ட வேண்டும் என்று மக்கள் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். கட்டணத்தைச் செலுத்தாவிட்டால் மின் இணைப்பைத் துண்டிப்போம் என்று மின் ஊழியர்கள் எச்சரிக்கிறார்கள்.
மின்துறை ஊழியர்கள் காங்கிரஸ் அரசின் நிர்வாகச் சீர்கேட்டுக்குத் துணைநின்று மின் குழப்படி பில்களை மக்கள் மீது திணிக்கிறார்கள். என்ன கட்டணம் என்பது யாருக்கும் புரியவில்லை.
புதுச்சேரியில் பல குடும்பங்கள் மின் கட்டணத்தைக் கட்ட முடியாமல் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளார்கள். மாநில அரசு அனைத்து மின் கட்டணங்களையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
தரமற்ற சீன மீட்டர்களைப் பொருத்திய பிறகுதான் மின் கட்டணம் கூடுதலாக வருவதாக பெரும்பாலான மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மக்களைப் பாதிக்கும் கூடுதல் மின் கட்டணச் சுமைகளை உடன் மாநில அரசு குறைக்க வலியுறுத்தி மின் கட்டண பில்களுடன் 30 தொகுதிகளிலும் மக்களுடன் சேர்ந்து மின் கட்டண மையங்களில் முற்றுகைப் போராட்டத்தை பாஜக வரும் 29-ம் தேதி நடத்தும்".
இவ்வாறு சாமிநாதன் தெரிவித்துள்ளார்.