

திருச்சியில் பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூர் ஊராட்சியில் பெரியார் நினைவு சமத்துவபுரம் உள்ளது. திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையையொட்டி இந்தச் சமத்துவபுரத்தின் நுழைவு வாயிலில் பெரியாரின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பெரியார் சிலைக்கு சமூக விரோதிகள் காவிச் சாயம் பூசி, காலணி மாலை அணிவித்திருப்பது இன்று (செப். 27) காலை தெரியவந்தது. இதனால், பதற்றமான சூழல் நிலவியது. தகவலறிந்து இனாம்குளத்தூர் மணிகண்டம் காவல் துறையினர் விரைந்து வந்து காலணி மாலையை அகற்றியதுடன், காவிச் சாயத்தைத் துடைத்து, சிலையைத் தூய்மைப்படுத்தினர்.
பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்டதற்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மு.க.ஸ்டாலின், தலைவர், திமுக
ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்வதால் மேலும் மேலும் மக்களிடம் இருந்து புறக்கணிக்கப்படுவோம் என்பதை இவர்கள் எப்போது புரிந்துகொள்ளப் போகிறார்கள்?
திருச்சி - இனாம்குளத்தூர் சமத்துவபுரத்தில் வைக்கப்பட்டுள்ள பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்டுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன்!
பெரியார் ஒரு இயக்கத்தின் தலைவர் அல்ல; தமிழ் இனத்தின் தலைவர். அவரை அவமதிப்பதாக நினைத்து அச்செயல் செய்பவர்கள் தங்களைத் தாங்களே அவமரியாதை செய்து கொள்கிறார்கள்!
வைகோ, பொதுச் செயலாளர், மதிமுக
திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம், இனாம்குளத்தூர் ஊராட்சியில் 2000 ஆம் ஆண்டு கருணாநிதி ஆட்சியில், பெரியார் நினைவு சமத்துவபுரம் உருவாக்கப்பட்டது. அந்த சமத்துவபுரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு நேற்று இரவு யாரோ மர்ம மனிதர்கள் காவிச் சாயம் பூசி, காலணி மாலை அணிவித்துள்ளனர்.
மத்தியில் பாஜக ஆட்சி நடக்கிறது. மாநிலத்திலும் அவர்களுக்கு அனுசரணையான ஆட்சி இருக்கிறது என்கிற துணிச்சலில் தமிழகத்தில் அண்மைக் காலமாக சில தைரியமில்லாத பேர்வழிகள் இந்த அக்கிரமச் செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
கருத்துக்குக் கருத்து, விவாதத்துக்கு விவாதம் என்பதில் நம்பிக்கையில்லாத இந்தச் சமூக விரோதிகளை இனம் கண்டு காவல்துறை உடனடியாக கைது செய்ய வேண்டும். மேலும், நாட்டுக்கு உழைத்திட்ட தலைவர்களின் சிலைகளை அவமதிப்பவர்களைக் கைது செய்து, கடுமையான தண்டனை வழங்கிட வேண்டும்.
இனாம்குளத்தூரில் உள்ள பெரியார் சிலைக்கு காவிச் சாயம் பூசி, காலணி மாலை அணிவித்து இருப்பதன் மூலம் தமிழகத்தில் இந்துத்துவா சக்திகள் காலூன்றி விட முடியாது. மாறாக, மக்கள் மத்தியில் எதிர்வினையாற்றும் என்பதை மறந்து விடாதீர்கள்.
பெரியார் தத்துவங்கள் ஆயிரமாயிரம் ஆண்டுகள் இந்த மண்ணில் நிலைத்து நிற்கும். இதுபோன்ற அருவருக்கத்தக்க நடவடிக்கைகளின் மூலம் பெரியாரையோ, திராவிட இயக்கக் கட்டமைப்பையோ சிதைத்துவிட முடியாது என்பதை இன எதிரிகளுக்கு எச்சரிக்க விரும்புகிறேன்.
டிடிவி தினகரன், பொதுச் செயலாளர், அமமுக
திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூரில் பெரியார் சிலை காவி வண்ணம் பூசி அவமதிக்கப்பட்டிருப்பது கடுமையான கண்டனத்திற்குரியது.
மறைந்த தலைவர்களின் சிலைகளை இப்படித் தொடர்ந்து அவமரியாதை செய்வதை ஏற்க முடியாது. சமூக அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்களை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.