

போதிய வருவாய் இல்லாத சூழலால் அரசு ஊழியர்களுக்கு செப்டம்பர் மாத ஊதியம் தர பொதுக் கணக்கில் ரூ.123 கோடி முன்தொகை பெறும் கோப்புக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் தந்துள்ளார்.
புதுச்சேரியைப் பொறுத்தவரை அரசுக்கு மதுபான விற்பனை, சுற்றுலாத்துறை, பத்திரப் பதிவு, விற்பனை வரி மூலம் அதிக அளவில் வருவாய் கிடைத்து வந்தது. கரோனாவால் ஊரடங்கு காலத்தில் வருவாய் முற்றிலும் முடங்கியது. ஊரடங்கில் தளர்வு ஏற்பட்டாலும் பழைய வருவாய் கிடைக்கவில்லை. ஜிஎஸ்டி உள்பட பல்வேறு வகைகளில் மத்திய அரசிடம் இருந்து வரும் நிதி அரசுக்குக் கிடைக்கவில்லை. இதனால் புதுச்சேரி அரசு கடும் பற்றாக்குறையைச் சந்தித்து வருகிறது.
இதையடுத்து, சம்பளக் குறைப்பு தொடர்பாக அரசு ஊழியர்கள் தரப்பில் பேச தலைமைச் செயலாளருக்கு முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டதாக மே மாதம் தெரிவித்தார். ஆனால், அதற்கு எதிர்ப்புக் கிளம்பியதால் அப்படியே கிடப்பில் வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, அரசு ஊழியர்களுக்கு மாதந்தோறும் சரியான நேரத்தில் முழு ஊதியம் தரப்படுவதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், அரசு ஊழியர்களுக்கு செப்டம்பர் மாத ஊதியம் தர பொதுக் கணக்கில் இருந்து ரூ.123 கோடி முன்தொகை பெறுவது தொடர்பான கோப்பினை துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு புதுச்சேரி அரசு அனுப்பியிருந்தது. அக்கோப்புக்கு கிரண்பேடி ஒப்புதல் தந்துள்ளார். அதனால், சரியான நேரத்தில் அரசு ஊழியர்களுக்கு செப்டம்பர் மாத ஊதியம் கிடைக்கும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
புதுச்சேரி அரசிடமிருந்து கடந்த 20-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை ஆளுநர் மாளிகைக்கு அனுப்பிய கோப்புகளில் பெரும்பாலானவற்றுக்கு ஒப்புதல் தந்துள்ளார்.