

திருச்சியில் பெரியார் சிலை சமூக விரோதிகளால் காவிச் சாயம் பூசி, காலணி மாலை அணிவித்து அவமரியாதை செய்யப்பட்டதால் பரபரப்பு நிலவியது.
திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூர் ஊராட்சியில் பெரியார் நினைவு சமத்துவபுரம் உள்ளது. திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையையொட்டி இந்தச் சமத்துவபுரத்தின் நுழைவு வாயிலில் பெரியாரின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், பெரியார் சிலைக்கு சமூக விரோதிகள் காவிச் சாயம் பூசி, காலணி மாலை அணிவித்திருப்பது இன்று (செப். 27) காலை தெரியவந்தது. இதனால், பதற்றமான சூழல் நிலவியது. தகவலறிந்து இனாம்குளத்தூர் மணிகண்டம் காவல் துறையினர் விரைந்து வந்து காலணி மாலையை அகற்றியதுடன், காவிச் சாயத்தைத் துடைத்து, சிலையைத் தூய்மைப்படுத்தினர்.
இந்தத் தகவல் பரவியதையடுத்து, சமத்துவபுரக் குடியிருப்புவாசிகள் மற்றும் திராவிடர் கழகம், திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அங்கு திரண்டனர். மேலும், பெரியார் சிலையை அவமரியாதை செய்தவர்களைக் கண்டுபிடித்துக் கைது செய்ய வலியுறுத்தி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு வழித்தடத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். உண்மையான குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்பட்டுவர் என்று காவல் துறையினர் சமாதானம் செய்து, மறியலைக் கைவிடச் செய்தனர்.
மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் ஜெயராம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும், அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளைக் காவல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதனிடையே, பெரியார் சிலை அவமரியாதை செய்யப்பட்ட தகவலறிந்து திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, இனாம்குளத்தூர் வந்து பெரியார் சிலையைப் பார்வையிட்டார்.
தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "பெரியார் சிலையை அவமரியாதை செய்வதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட நினைக்கின்றனர். இதுபோன்ற நபர்கள் மீது காவல் துறையினர் தொடக்கத்திலேயே நடவடிக்கை எடுத்திருந்தால், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்திருக்காது. இவர்கள் நடவடிக்கை எடுக்கமாட்டார்கள். நடவடிக்கை எடுத்தால் மேலே உள்ளவர்கள் தங்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என்று அஞ்சுகின்றனர்" என்று கே.என்.நேரு தெரிவித்தார்.