மரம் வளர்ப்பில் ஆர்வம் காட்டும் குன்னம் விஏஓ

மரம் வளர்ப்பில் ஆர்வம் காட்டும் குன்னம் விஏஓ
Updated on
1 min read

பெரம்பலூர் மாவட்டம் துங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்க டேசன். 2013-ம் ஆண்டு கிராம நிர்வாக அலுவலராக தேர்வாகி பணி நியமனம் செய்யப்பட்ட இவர் பணிபுரியும் கிராமங்களில் எல்லாம் பொது இடங்களில் மரம் வளர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

கிராம நிர்வாக அலுவலராக தேர்வாகி பெரிய வெண்மணி மேற்கு, பெரிய வெண்மணி கிழக்கு, புதுவேட்டக்குடி, துங்க புரம் ஆகிய கிராமங்களில் கிராம நிர்வாக அலுவலராக பணி புரிந்த இவர், அங்கெல்லாம் அரசுக்கு சொந்தமான, யாருக்கும் பயன்படாத புறம்போக்கு இடங் களில் மரக்கன்றுகளை நட்டு வளர்த்து தோப்புகளையும், குறுங் காடுகளையும் உருவாக்கியுள்ளார். தற்போது குன்னம் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வரும் வெங்கடேசன் குன்னம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் 50-க்கும் மேற்பட்ட மரக்கன்று களை நட்டு வளர்த்து வருகிறார்.

தனது சொந்த முயற்சியில் 2 ஆயிரம் மரங்களை வளர்த்துள்ள வெங்கடேசன், மரம் வளர்ப்பில் ஆர்வம் உள்ள தன்னார்வலர்கள் பலருக்கும் இலவசமாக மரக்கன்றுகளை வாங்கி வழங்கி வருகிறார். மரக்கன்றுகளுக்கான தேவை அதிகரிக்கவே துங்கபுரத்தில் உள்ள தனது வீட்டில் நிறைய மரக்கன்றுகளை உருவாக்குவதற்காக நர்சரி ஒன்றை அமைத்துள்ளார். இந்த நர்சரியில் நமது மண்ணுக்கேற்ற நாட்டு மரங்களான வேம்பு, பாதாம், நாவல், புங்கன், இலுப்பை, வாகை, நெல்லி, விளாம்பழம் மரக்கன்றுகளை உருவாக்கி மரம் வளர்க்க விரும்புவோருக்கு இலவசமாக வழங்கி வருகிறார்.

மரம் வளர்ப்பில் ஆர்வம் காட்டுவது குறித்து வெங்கடேசன் கூறியபோது, “கல்லூரியில் படிக்கும் காலத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பேச்சு, நடவடிக்கைகளால் கவரப்பட்டு அவரது தீவிர பற்றாளர் ஆனேன். அவர் காட்டிய வழியில் நிறைய மரங்களை வளர்த்து இப்பூமியின் சுற்றுச்சூழலை மேம்படுத்த உதவ வேண்டும் என அப்போதே முடிவு செய்தேன்.

என் ஊதியத்தில் ஒரு தொகையை மாதம்தோறும் மரம் வளர்ப்புக்காக ஒதுக்குகிறேன். இதுவரை சுமார் 2 ஆயிரம் மரங்கள் உருவாக காரணமாக இருந்திருக்கிறேன். என் ஆயுளில் ஒரு லட்சம் மரங்களையாவது வளர்த்து பூமியின் பசுமை பரப்பை அதிகரித்து வெப்பமயமாதல் ஆபத்திலிருந்து நாம் வசிக்கும் பூமியை காப்பாற்ற வேண்டும் என விரும்புகிறேன்” என்றார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in