

கடந்த அரை நூற்றாண்டுக்கு முன்பு வரை, பதநீர், பனைநார், பனையோலை, பனைமட்டை, பனஞ்சட்டம், பனங்கருப்பட்டி, கள், பனை நுங்கு, பனம் பழம், பனங்கிழங்கு என தமிழர்களின் வாழ்வுடன் இணைந்திருந்தது பனைமரம். ஆனால், செங்கல்சூளைகள் மற்றும் தொழிலகங்களின் எரிபொருளுக்காக பனைமரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டதால், தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 50 கோடியா இருந்த பனை மரங்களின் எண்ணிக்கை தற்போது 5 கோடியாக குறைத்துவிட்டது.
இந்நிலையில், பனை மரங்களின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்தி, புதிதாக பனை மரங்களை நடவு செய்ய அரசும், பல்வேறு அமைப்புகளும் முயற்சித்து வருகின்றன.பொள்ளாச்சிதெற்கு ஊராட்சிக்கு உட்பட்டதுசிஞ்சுவாடி கிராமம். லட்சுமாபுரம், குண்டலப்பட்டி, தேவநல்லூர் ஆகிய குக்கிராமங்களை கொண்டஇங்கு 3,000 பேர் வசித்து வருகின்றனர். தென்னை, பனிக்கடலை விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்ட இக்கிராமத்தில் நிலத்தடி நீராதாரமாக இருப்பது 18 ஏக்கர் பரப்பு கொண்ட சிஞ்சுவாடி குட்டை மற்றும் 4.5 ஏக்கர் பரப்பு கொண்ட லட்சுமாபுரம் குட்டைகளாகும்.
இந்த கிராமத்தைச் சுற்றியுள்ள 1,500 ஏக்கர் விவசாய நிலங்களில் வடகிழக்கு மற்றும் தென்மேற்குப் பருவகாலங்களில் பெய்யும் மழைநீர், ஓடைகள் மற்றும் பள்ளங்கள் மூலம் இந்த குட்டைகளை வந்தடைகிறது.
கடந்த 10 ஆண்டுகளாக விவசாய நிலங்களில் காற்றாலைகள் அமைக்கப்பட்டதால், நீர்வரத்து ஓடைகள் பராமரிப்பின்றி தூர்ந்து போயின. இதையடுத்து, தமிழ்நாடுநீர்வள ஆதார பாதுகாப்பு மற்றும் நீர்மேலாண்மை இயக்கம் சார்பில் கடந்த ஆண்டு குட்டைகள் தூர் வாரப்பட்டன.
தற்போது குளக்கரையில் ஊராட்சி சார்பில் நிலத்தடி நீரை செறிவூட்ட பனை மரங்கள் நடவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து சிஞ்சுவாடி ஊராட்சித் தலைவர் ஜெயக்குமார் கூறும்போது, ‘‘நிலத்தடி நீராதாரத்தை செறிவூட்டி மேம்படுத்தும் வகையில், சிஞ்சுவாடி கிராமத்தில் தரிசாக உள்ள நிலங்களிலும், ஊராட்சிக்கு சொந்தமான ஒன்றரை ஏக்கர் நிலத்திலும் நாட்டு அத்தி, நாவல், கொடுக்காபுளி, கொன்றை, மந்தாரை, இலுப்பை, நாட்டு வேம்பு, மலை வேம்பு, பீயன், சீதா, கருவேல், புளி, பனை,கொய்யா மற்றும் கடம்பை என 1,800-க்கும் மேற்பட்ட மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, அதிக அளவில் பனை மரம் வளர்க்கிறோம். ஒரு பனை மரம் குறைந்தது 10,000 லிட்டர்நீரைச் சேமிக்கும். இதனால்தான் நமது முன்னோர் நீர்நிலைகளின் கரைகளில் பனைகளை நட்டு வளர்த்தனர். தற்போது, சிஞ்சுவாடிகுட்டை, லட்சுமாபுரம் குட்டைகளில்மழைநீர் சேகரிப்பை மேம்படுத்த 1,000 பனை மரங்கள் நடப்பட்டுள்ளன. மேலும், 2,000 பனை விதைகளை நடும் பணி நடைபெற்று வருகிறது’’ என்றார்.