Last Updated : 27 Sep, 2020 09:19 AM

 

Published : 27 Sep 2020 09:19 AM
Last Updated : 27 Sep 2020 09:19 AM

குடியிருப்பு கட்டுமானப் பணி தாமதம்: பரிதவிக்கும் தூய்மைப் பணியாளர்கள்

கோவை வெரைட்டிஹால் சாலையில்உள்ள சி.எம்.சி. காலனியில்மாநகராட்சியில் பணிபுரியும்தூய்மைப் பணியாளர்கள் குடியிருந்துவருகின்றனர். இங்குள்ள 26 அடுக்குமாடிக் குடியிருப்புகளில் 432 வீடுகள் உள்ளன. 1989-ல் கட்டப்பட்ட இக்கட்டிடங்களின் சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதுடன், சில வீடுகளின் சுவர்களில் செடி, கொடிகள் வளர்ந்துள்ளன.

இதையடுத்து, பழுதடைந்த வீடுகளை இடித்து அகற்றிவிட்டு, அங்கேயே புதிய வீடுகள் கட்டித்தர வேண்டுமென இங்கு குடியிருப்போர் வலியுறுத்தினர். இதையடுத்து, பழைய கட்டிடங்களை இடித்துவிட்டு, ரூ.34.56 கோடி மதிப்பில் புதிதாக 432 வீடுகள் கட்ட குடிசை மாற்று வாரியம் முடிவு செய்தது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இக்கட்டிடங்களில் வசித்து வருவோர்,தங்களது வீடுகளை காலி செய்து வருகின்றனர். இவர்கள், அருகில் உள்ள மைதானத்தில் ‘ஷெட்’ அமைத்து தங்கியுள்ளனர். இங்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லை என்று தூய்மைப் பணியாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சி.எம்.சி. காலனி அடுக்குமாடி குடியிருப்போர் சங்கத் தலைவர் ரவி கூறும்போது, ‘‘பழுதடைந்த குடியிருப்புகளில் வசித்தவர்கள், வேறு இடங்களுக்குச் சென்றால் பணிக்கு செல்வது பாதிக்கப்படும் என்பதால், அருகில் உள்ள மைதானத்தில் `ஷெட்' அமைத்து தங்கியுள்ளனர்.

ஏறத்தாழ 300 குடும்பங்கள் இங்குதங்கியுள்ளன. இப்பகுதியில் கழிவுநீர் வெளியேற வழியில்லாததால், வீடுகளுக்கு முன்பு தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. இப்பகுதி மண் தரை என்பதால், மழை பெய்தால் சேறும் சகதியாக மாறிவிடுகிறது. தேவையான அளவு கழிப்பிட வசதியும் இல்லை.


கோவை வெரைட்டிஹால் சாலை சி.எம்.சி. காலனியில் தற்காலிக குடியிருப்புப் பகுதியில் தேங்கியுள்ள கழிவுநீர் | படங்கள்: ஜெ.மனோகரன்

குடிசை மாற்று வாரியத்தினர் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.8 ஆயிரம் தருவதாகக் கூறியிருந்தனர். ஆனால், பழைய வீட்டிலிருந்த மின் மீட்டர்களையே எடுத்து ‘ஷெட்’ டில் உள்ள வீடுகளில் பொருத்திவிட்டு, அதற்கு கட்டணமாக ரூ.6,750 பிடித்துக் கொண்டனர். மீதமுள்ள தொகையையும் இன்னும் தரவில்லை.

மேலும், சிஎம்சி காலனியில் பழுதடைந்த வீடுகளை இடித்து அகற்றிவிட்டு, புதிய வீடுகளை கட்டும் பணியையும் இன்னும் தொடங்கவில்லை. இதனால் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளோம். எனவே, புதிய குடியிருப்பு கட்டுமானப் பணியை விரைவில் தொடங்குவதுடன், தற்காலிகமாக `ஷெட்' அமைந்துள்ள பகுதியில் அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும்’’ என்றார்.

சிஎம்சி காலனியைச் சேர்ந்தோர் கூறும்போது, ‘‘இப்பகுதியில் 3 நாட்களுக்கு ஒருமுறை குடிநீரும், தினமும் காலை, மாலை நேரங்களில் உப்பு நீரும் விநியோகிக்க வேண்டும். இங்கு 10-க்கும் மேற்பட்டஇடங்களில் மின் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை சரிவர பொருத்தவில்லை. மின் வயர்கள் ஆபத்தான முறையில் தொங்கிக் கொண்டிருக்கின்றன. வீடுகளுக்கு முன் செல்லும் கழிவுநீரால் கொசுத் தொல்லை அதிகரித்துள்ளது’’ என்றார்.

தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய செயற் பொறியாளர் குமார் கூறும்போது, ‘‘சிஎம்சி காலனியில் பழைய கட்டிடங்களை இடித்து விட்டு, புதிய வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வீடுகளைஇடித்தவுடன், 18 மாதங்களில் புதிய வீடுகள்கட்டித்தரப்படும்’’ என்றார்.

மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ‘‘சிஎம்சி காலனியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக குடியிருப்புகளில் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தற்போது ரூ.21 லட்சம் மதிப்பில் கழிவுநீர் சாக்கடை கட்டப்பட்டு வருகிறது’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x