Published : 27 Sep 2020 09:15 AM
Last Updated : 27 Sep 2020 09:15 AM

அணைகளின் உபரி நீரால் நிரம்பும் குளங்கள்

மேற்குத் தொடர்ச்சி மலை யில், வால்பாறை பகுதியில் பெய்துவரும் தொடர் மழையால் பிஏபி திட்டத் தொகுப்பு அணைகளில் சோலையாறு, பரம்பிக்குளம் மற்றும் ஆழியாறுஅணைகள் அதன் முழுக் கொள்ளளவை எட்டின. ஆழியாறு அணையிலிருந்து திறக்கப்படும் உபரி நீர் கடந்தகாலங்களில் ஆற்றில் திறந்துவிடப்பட்டு, கடலில்கலந்து வீணாகிவந்தது.

தற்போது பொள்ளாச்சி பகுதியில் உள்ள குளம், குட்டை, தடுப்பணைகள் ஆகியன குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரப்பட்டு, நீர்வழித்தடங்கள் சீரமைக்கப்பட்டுள்ளதால், வாய்க்கால் மூலம் நீர்நிலைகளுக்கு அளிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துவந்தனர்.

இதன் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள ஆயிரக்கணக்கான கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறுகளின் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என தெரிவிக்கப்பட்டது. இது குறித்து ஆய்வு செய்த பொதுப்பணித்துறையினர், பாலாறு படுகை மற்றும் ஆழியாறு படுகையில் உள்ள 10-க்கும் மேற்பட்ட குளங்கள், குட்டைகள் மற்றும் தடுப்பணைகளுக்கு உபரி நீரை அளிக்க முடிவு செய்தனர்.

இதையடுத்து சமத்தூரில் அமைந்துள்ள எலவக்கரை குளம்,குப்புச்சிபுதூர் குளம், பாப்பத்தி பள்ளம் குளம், கரியாஞ்செட்டிபாளையம் கிராமத்தில் உள்ள 7 தடுப்பணைகள், மஞ்சநாயக்கனூரில் உள்ள 25 தடுப்பணைகள், பில்சின்னாம்பாளையத்தில் உள்ள குட்டைகள் மற்றும் தடுப்பணைகளுக்கு உபரிநீர் கொண்டு செல்லப்படுகிறது. சமயோசிதமாக செயல்பட்ட பொதுப்பணித் துறையினரை விவசாயிகள் பாராட்டினர்.

இது குறித்து மஞ்சநாயக்கனூர் விவசாயி செந்தில்குமார் கூறும்போது, ‘ஆழியாறு அணை யின் நீரை ஆதாரமாகக்கொண்டு பாசன வசதியைப் பெறும் எலவக்கரை குளத்தின் மொத்த பாசனப்பரப்பான 250 ஏக்கரில் தென்னை, காய்கறிகள், சிறுதானியங்கள் மற்றும் பருத்தி உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.11.34 மில்லியன் கன அடி நீர் கொள்ளளவு கொண்ட இந்த குளத்தின் மண்கரையின் நீளம் 1,860 மீட்டர். தற்போது அணையிலிருந்து வெளியேறும் உபரி நீர், எலவக்கரை குளத்துக்கு திருப்பி விடப்பட்டுள்ளதால் 10 அடி உயரம் கொண்ட குளம் வேகமாக நிரம்பி வருவது இப்பகுதியில் உள்ள விவசாயிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது” என்றார்.

பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘ஆழியாறு அணையின் நீர்ப்பிடிப்புபகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதால் அணைக்கு அதிக அளவில் தண்ணீர்வரத்து உள்ளது. திறந்து விடப்படும் உபரிநீர் ஆழியாற்றில் கலந்து கேரள மாநிலத்தின் மூலத்துரா ஆற்றின் வழியாக அரபிக்கடலில் சென்று கலக்கும். விவசாயிகள் கோரிக்கையை ஏற்று, உபரி நீர் வீணாகாமல் தடுக்கும் வகையில்குளம், குட்டை, தடுப்பணைகளுக்கு வழங்கப்படுகிறது. அணைக்கு நீர்வரத்துக்கு ஏற்ப, கால்வாயில் தண்ணீர் வழங்கப்படுகிறது. இதன் மூலம் கடலில் வீணாக இருந்த தண்ணீர் சேமிக்கப்பட்டுள்ளது’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x