

தமிழக பாஜக சார்பில், மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த வேளாண் சட்டங்கள் குறித்து, விவசாய சங்கங்களின் நிர்வாகிகள், உழவர் உற்பத்தி நிறுவன பிரதிநிதிகள், விவசாயிகளுடன் கலந்தாய்வு கூட்டம் கோவையில் நேற்று நடைபெற்றது. பாஜக விவசாய அணி மாநிலத் தலைவர் ஜி.கே.நாகராஜ் தலைமை வகித்தார். பாஜக மாநில துணைத் தலைவர்கள் வானதி சீனிவாசன், கனகசபாபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வேளாண் சட்டங்கள் தொடர்பாக, விவசாயிகள் கேட்ட சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. கூட்டத்தில், பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், பொதுச்செயலாளர் விஜயராகவன், செயலாளர் நடராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
“இதேபோன்ற கூட்டங்கள் வரும் 29-ம் தேதி திருச்சியிலும், 30-ம் தேதி தஞ்சையிலும், அதைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் நடத்தப்படும்’’ என ஜி.கே.நாகராஜ் தெரிவித்தார்.
பின்னர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘மக்களிடம் கருத்து கேட்டுதான், சட்டங்களை இயற்ற வேண்டும் என்றால், எந்தச் சட்டங்களையும் அரசாங்கம் இயற்ற முடியாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் மக்கள் கருத்தை கேட்காமலேயே சட்டங்களை இயற்றலாம். அதற்கு சட்டத்தில் இடம் உண்டு. பிரதமர் நரேந்திரமோடி, தொழில்துறைக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை விட, விவசாயத்துறைக்கு அதிக முக்கியத்துவம் தருகிறார். வேளாண் சட்டங்கள் குறித்து, அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் கூறிய கருத்துக்கு, தமிழக முதல்வர் முன்னரே விளக்கம் அளித்துவிட்டார். மத்திய அரசு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்த எந்த திட்டத்தையும் செயல்படுத்தாது. விலை வீழ்ச்சி ஏற்பட்டாலும், இச்சட்டங்கள் மூலம் நிறுவனங்களுடன் செய்த ஒப்பந்தம் அடிப்படையில் விவசாயிகளுக்கு உறுதியான வருவாய் கிடைக்கும்’’ என்றார்.