

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அமைச்சரின் உதவியாளரைக் கடத்தி, ரூ.10 லட்சம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த அதிமுக பிரமுகர் உள்ளிட்ட 6 பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
இதுகுறித்து உடுமலை டிஎஸ்பி ரவிக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கால்நடைத் துறை அமைச்சரின் உதவியாளர் கர்ணன், அண்மையில் சொத்து ஒன்றை விற்றதில் பணம் கையிருப்பு வைத்துள்ளார். இதையறிந்த உடுமலை ராமசாமி நகரைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் பிரதீப்(39), கர்ணனை கடத்தி பணம் பறிக்கத் திட்டமிட்டுள்ளார்.
இதையடுத்து, அவரது நண்பர் ரகு, உடுமலை காந்திசவுக் பகுதியைச் சேர்ந்த அருண்குமார்(23), உடுமலை சுரேந்திரன்(27), பட்டுக்கோட்டை வினோத்(20), செல்வகணபதி(23), ஷேக் அகமது தாகா(21) ஆகியோர் சேர்ந்து, அமைச்சரின் உதவியாளரைக் கடத்த 15 நாட்களாக திட்டமிட்டுள்னர்.
அந்த திட்டத்தின்படி, அமைச்சரின் உதவியாளரைக் கடத்திய பிரதீப், அவரது மாமா தேவராஜுலுவுக்கு(55) தகவல் கொடுத்து, அவருக்குச் சொந்தமான கிடங்கில் கர்ணனை அடைத்துவைத்துள்ளனர். ரூ.10 லட்சம் கொடுக்காவிட்டால், கொலை செய்து விடுவதாக அவரை மிரட்டியுள்ளனர். கொலை மிரட்டலுக்குப் பயந்த கர்ணன், தனது ஏடிஎம் கார்டைக் கொடுத்துள்ளார். அதைப் பெற்றுக்கொண்ட கும்பல் ரூ.50,000 எடுத்துக் கொண்டு, மேலும் ரூ.10 லட்சத்தை ஒரு வாரத்துக்குள் கொடுக்காவிட்டால், கொலை செய்து விடுவதாகவும், கடத்தல் சம்பவத்தை வெளியில் சொல்லக் கூடாது என்றும் மிரட்டியுள்ளனர்.
பின்னர், மொடக்குப்பட்டி கிராமம் அருகே அமைச்சரின் உதவியாளரை விட்டுவிட்டு, அக்கும்பல் தப்பிச் சென்றுள்ளது.
அமைச்சர் அலுவலகத்தில் பணியாற்றும் பெண் ஊழியர் கொடுத்த புகாரின் பேரில் உடுமலை போலீஸார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக இருந்த 6 பேரைக் கைது செய்தனர். மேலும், தப்பியோடிய ரகுவை தனிப்படை போலீஸார் தேடி வருகின்றனர்.
கோவை சிறையில் அடைப்பு
கைது செய்யப்பட்ட பிரதீப், சுரேந்திரன், வினோத், செல்வகணபதி, ஷேக் அகமது தாகா, அருண்குமார் ஆகியோர் மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.