Published : 27 Sep 2020 07:31 AM
Last Updated : 27 Sep 2020 07:31 AM

பாஜக தேசிய நிர்வாகிகள் அறிவிப்பு: முரளிதர ராவ், எச்.ராஜா விடுவிப்பு- தமிழகத்தைச் சேர்ந்த யாருக்கும் இடம் இல்லை

சென்னை

பாஜக தேசிய நிர்வாகிகளை அக்கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா நேற்று அறிவித்துள்ளார்.

பாஜக கட்சி விதிகளின்படி கிளை கமிட்டித் தலைவர் முதல் தேசியத் தலைவர் வரை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை உள்கட்சித் தேர்தல் நடைபெறும். புதிய தலைவர் பொறுப்பேற்றதும் நிர்வாகிகள் மாற்றியமைக்கப்படுவது வழக்கம்.

அதன்படி கடந்த ஜனவரி 20-ம் தேதி நடைபெற்ற உள்கட்சித் தேர்தலில் பாஜக தேசியத் தலைவராக ஜெ.பி.நட்டா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் தேசிய நிர்வாகிகள் பட்டியலை ஜெ.பி.நட்டா நேற்று வெளியிட்டார். முன்னாள் முதல்வர்கள் வசுந்தரா ராஜே சிந்தியா, ரமன் சிங், முன்னாள் மத்திய அமைச்சர் ராதாமோகன் சிங் உள்ளிட்ட 12 பேர் தேசிய துணைத் தலைவர்களாகவும், பூபேந்தர் யாதவ், அருண் சிங், கைலாஷ் விஜய்வர்கியா, துஷ்யந்த்குமார் கவுதம், ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் என்.டி.ராமராவின் மகள் டி.புரந்தரேஸ்வரி, கர்நாடக மாநில பாஜக எம்.எல்.ஏ.வான சி.டி. ரவி, தருண் சுக், திலீப் சாகியா ஆகிய 8 பேர் தேசிய பொதுச்செயலாளர்களாகவும், தேசிய அமைப்பு பொதுச்செயலாளராக பி.எல்.சந்தோஷ், தேசிய இணை அமைப்பு பொதுச்செயலாளர்களாக வி.சதீஷ், சவுதான் சிங் ஆகியோரும், தேசிய செயலாளர்களாக 13 பேரும் நியமிக்கப்பட்டுஉள்ளனர். தேசிய பொருளாளர், இளைஞரணி, மகளிரணி போன்ற துணை அமைப்புகளின் தேசியத் தலைவர்கள், தேசிய செய்தித் தொடர்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

பாஜக தேசிய நிர்வாகிகள் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவராவது இதுவரை இடம்பெற்று வந்தனர். 1980-ல் பாஜக தொடங்கப்பட்டபோது தமிழகத்தைச் சேர்ந்த ஜனா கிருஷ்ணமூர்த்தி தேசிய செயலாளராக நியமிக்கப்பட்டார். பாஜக தேசியத் தலைவர் வரை அவர் உயர்ந்தார். அதன்பிறகு தேசிய செயலாளர்களாக இல.கணேசன், தமிழிசை சவுந்தரராஜன், எச்.ராஜா இருந்துள்ளனர். இல.கணேசன் தேசிய துணைத் தலைவராகவும் இருந்துள்ளார்.

2014 ஆக. 16-ம் தேதி தமிழிசை, தமிழக பாஜக தலைவரானபோது எச்.ராஜா தேசிய செயலாளராக நியமிக்கப்பட்டார். கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக தேசிய செயலாளராகவும், கேரள மாநில பொறுப்பாளராகவும் இருந்த எச்.ராஜாவுக்கு தற்போது எந்த பொறுப்பும் அளிக்கப்படவில்லை. அதுபோல தமிழக பாஜக பொறுப்பாளராக இருந்த பி.முரளிதரராவுக்கும் எந்தப் பொறுப்பும் வழங்கப்படவில்லை.

கர்நாடகத்தைச் சேர்ந்த சி.டி.ரவி, ஆந்திரத்தைச் சேர்ந்த புரந்தரேஸ்வரி பொதுச்செயலாளராகவும், தெலங்கானாவின் டி.கே.அருணா, கேரளத்தைச் சேர்ந்த அப்துல்லா குட்டி தேசிய துணைத் தலைவராகவும், தேஜஸ்வி சூர்யா தேசிய இளைஞரணித் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 39 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளதால் தமிழக பாஜகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x