Published : 27 Sep 2020 07:14 AM
Last Updated : 27 Sep 2020 07:14 AM

பழையசீவரத்தில் தடுப்பணை அமைக்க தொடர்ந்து எதிர்ப்பு: அணைக்காக 2 இடங்களில் ஆட்சியர் ஆய்வு: விவசாயிகள் கூட்டத்தை கூட்டவும் திட்டம்

காஞ்சிபுரம் பழையசீவரம் அருகே தடுப்பணை அமையும் இடத்தில் ஆட்சியர் நேற்று ஆய்வு செய்தார். தற்போது தடுப்பணை அமைய உள்ள இடத்தின் சாதக பாதகங்களை அவர் பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

காஞ்சிபுரம் பாலாற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தனர். தமிழக அரசும் உள்ளாவூர் பகுதியில் தடுப்பணை கட்டப்படும் என்று அறிவித்து, இதற்கான பூமி பூஜையும் நடைபெற்றது.

ஆனால், உள்ளாவூருக்கு அருகேஉள்ள பழையசீவரம் பகுதியில் தடுப்பணை அமைக்க தற்போதுநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு விவசாயிகளில் ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆற்றின் அகலம் அதிகம் உள்ள உள்ளாவூர் பகுதியில் தடுப்பணை அமைக்காமல், அகலம் குறைவாக உள்ள பழையசீவரம் பகுதியில் தடுப்பணை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர்.

பழையசீவரம் பகுதியில் தடுப்பணை அமைந்தால் அது எளிதில் மூழ்கிவிடும் அபாயம் இருப்பதாக கூறி, விவசாயிகள் போராட்டங்களை நடத்தினர். இதுதொடர்பாக ஆட்சியர் பொன்னையா முன்னிலையில்பொதுப்பணித் துறை அதிகாரிகள், விவசாயிகளின் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து ஆட்சியர் பொன்னையா அணை கட்டப்படும் இடத்தின் 2 பகுதிகள், உள்ளாவூர் பகுதியில் அடிக்கல் நாட்டு விழாநடந்த இடம் ஆகியவை குறித்து ஆய்வு செய்தார். மேலும் உள்ளாவூர்பகுதியில் இருந்து செல்லும் கால்வாய்கள், தற்போது அணை கட்டப்படும் இடத்தில் இருந்து செல்லும் கால்வாய்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தார். இந்த 2 இடங்களுக்கு இடையே உள்ள சாதக, பாதகங்கள் குறித்து விரிவான அறிக்கை ஒன்றை அளிக்கும்படியும் பொதுப்பணித் துறையிடம் ஆட்சியர் கேட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த அறிக்கையின் அடிப்படையில் விவசாயிகள் கூட்டத்தை கூட்டி விளக்கம் அளிக்கப்பட உள்ளது.

இதுகுறித்து பொதுப்பணித் துறைஅதிகாரிகளிடம் கேட்டபோது, “தற்போது அணை கட்டும் இடத்தில் இருந்துஇருபுறமும் சுமார் 30 ஏரிகளை இணைக்கும் கால்வாய்கள் உள்ளன. இந்த இடத்தில் அணை அமைவதுதான் சிறப்பானதாக இருக்கும். பொதுப்பணித் துறையின் திட்டம் மற்றும் வடிவமைப்புக்கான பிரிவு பல்வேறு ஆய்வுகளுக்கு பிறகே இந்த இடத்தைதேர்வு செய்துள்ளது. இந்த தடுப்பணையில் இருந்து பாலூர் கால்வாய் மூலம்நீஞ்சல்மடு, பி.வி.களத்தூர் வழியாக ஒரு கால்வாயும், மற்றொரு கால்வாய் அரும்புலியூர் வழியாகச் சென்று மதுராந்தகம் பழையனூர், அத்திமனம் வழியாக சென்று கிளியாறு கால்வாயில் கலக்கும் வகையிலும் உள்ளது.

இந்த இடம் தடுப்பணை அமைப்பதற்கு ஏற்ற இடம், மக்களுக்கு பயனளிக்கும் இடம் என்பதால்தான் இந்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. எங்கு செலவு குறைவாகவும் பயன்அதிகமாகவும் இருக்குமோ அங்குதான் தடுப்பணை அமைக்க முடியும். செலவு அதிகமாகவும், பயன் குறைவாகவும் இருக்கும் இடத்தில் தடுப்பணை அமைக்க முடியாது" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x