Published : 07 Sep 2015 10:03 AM
Last Updated : 07 Sep 2015 10:03 AM

கர்நாடகத்திடம் இருந்து காவிரி நீரைப் பெற பிரதமரிடம் நேரில் அழுத்தம் கொடுக்க வேண்டும்: முதல்வருக்கு கருணாநிதி வலியுறுத்தல்

காவிரி நீரை பெறுவதற்கு தமிழக பிரதிநிதிகளுடன் பிரதமரை நேரில் சந்தித்து முதல்வர் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதிகளின் குறுவை சாகுபடிக் காக ஜூன் 12-ம் தேதியே காவிரியிலிருந்து கர்நாடகம் தண்ணீரை திறந்துவிட்டிருக்க வேண்டும். ஆனால், ஆகஸ்ட் 8-ம் தேதி தான் தண்ணீர் திறந்து விடப் பட்டது. இந்த தண்ணீர் வேதாரண்யம் போன்ற கடைமடை பகுதிகளுக்கு இன்னும் வராததால் நேரடியாக விதைக்கப்பட்ட சம்பா பயிர்கள் கருகுவதாக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் கூறியுள்ளார்.

காவிரி நீரை தர முடியாது என்று கர்நாடக அரசியல் கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன. அம்மாநில அரசே அனைத்து கட்சி தலைவர்களையும், மத்தியிலுள்ள கர்நாடக அமைச்சர்களையும் அழைத்துச் சென்று பிரதமரிடம் ஒருமித்த குரலில் இந்தக் கருத்தை வெளிப்படுத்தியுள்ளது. ஆனால், அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட தமிழக அரசு கூட்டாதது வேதனையளிக்கிறது.

கர்நாடகத்தில் வறட்சி நிலவுவதால் இரு மாநில அரசுகளும் பிரச்சினையை பேசித் தீர்க்க வேண்டும் என்று அம்மாநில முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார். காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 4 அணைகளில் கடந்த 5-ம் தேதி நிலவரப்படி 74.23 டிஎம்சி தண்ணீர் உள்ளது எனத் தெரிகிறது.

எனவே, போதிய மழை இல்லாத காலங்களில் நடுவர் மன்ற நீர்ப்பகிர்வு முறைப்படி, இருக்கும் நீரைப் பகிர்ந்து கொள்வதுதான் சட்டப்படியான அணுகுமுறை என்பதைத் தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் கர்நாடக முதலமைச்சரைச் சந்தித்து வலியுறுத்த வேண்டும்.

காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழு அமைக்கவும், விவசாயிகளுக்கான நீரை பெற்றுத்தரவும் தமிழக சட்டப் பேரவை கட்சி தலைவர்கள், எம்பி-க்கள், எம்எல்ஏக்கள், மத்தியிலுள்ள தமிழக அமைச்சர் ஆகியோரை அழைத்துச் சென்று பிரதமரிடம் தமிழக முதல்வர் அழுத்தம் தர வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x