

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகேயுள்ள முக்கணாமலைப்பட்டியில் காலியாக உள்ள அரசுப் பள்ளிக் கட்டிடத்தில் மேல்நிலைப் பள்ளி தொடங்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முக்கணாமலைப்பட்டியில் 1982-ல் அரசு உயர்நிலைப் பள்ளி தொடங்கப்பட்டது. இப்பள்ளி அதே கிராமத்தில் மற்றொரு இடத்தில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்துக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதனால் ஏற்கெனவே இயங்கிய பள்ளியில் 3 கான்கிரீட் கட்டிடங்களில் 6 அறைகளும், ஓட்டுக் கட்டிடத்தில் 4 அறைகளும் காலியாகவே உள்ளன. கடந்த 2 ஆண்டுகளாக பயன்பாடற்ற நிலையில் உள்ள இப்பள்ளி வளாகம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. முக்கணாமலைப் பட்டியிலிருந்து மேல்நிலை வகுப்புகளுக்காக சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அன்னவாசல் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சுமார் 100 பேர் செல்கின்றனர். இப்பள்ளிக்கு மாணவ, மாணவியர் பாதுகாப்பற்ற சூழலில் சென்றுவருகின்றனர். இதற்கு தீர்வு காணும்விதமாக அரசு நடவடிக்கை எடுத்து காலியாக உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிக் கட்டிடத்தில் மேல் மேல்நிலை வகுப்பு தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் தரப்பினர் கூறும்போது, “முக்கணாமலைப்பட்டியில் அரசு மேல்நிலைப் பள்ளி தேவையென விண்ணப்பித்தால் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.