Published : 26 Sep 2020 08:10 PM
Last Updated : 26 Sep 2020 08:10 PM

ஜிஎஸ்டி வரியால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பினை ஈடுசெய்யும் நிதியை வேறு செலவுகளுக்குப் பயன்படுத்துவதா?- ஸ்டாலின் கண்டனம்

நாளைய தலைமுறை இழித்துப் பேசும் அளவுக்கு நடந்து கொள்ளாமல், இனியேனும் தமிழகத்திற்கு வர வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையைப் பெற்றிட முதல்வர் பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கை:

''சரக்கு மற்றும் சேவைகள் வரி (ஜி.எஸ்.டி) சட்டத்தைச் செயல்படுத்தியதால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பினை ஈடுசெய்யும் நிதியான 47,272 கோடி ரூபாயை மத்திய அரசு வேறு செலவுகளுக்குப் பயன்படுத்திவிட்டது” என்று தலைமைக் கணக்கு ஆய்வு அலுவலரின் (சி.ஏ.ஜி) அறிக்கை சுட்டிக்காட்டிய பிறகும், தமிழ்நாட்டிற்கு இது தொடர்பாக இழைக்கப்பட்டுள்ள அநீதியை எதிர்த்துக் குரல் கொடுக்காமல் அமைதி காத்துக் கொண்டிருக்கும் முதல்வர் பழனிசாமிக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நள்ளிரவில் செயல்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி. சட்டத்தால் மாநிலங்களுக்கு ஏற்படும் நிதியிழப்பு குறித்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதிக்கப்பட்டு, “அந்த இழப்பு ஈடு செய்யப்படும்” என்று மறைந்த நிதியமைச்சர் அருண் ஜெட்லி வாக்குறுதியளித்து, அது 101-ஆவது அரசியல் சட்டத் திருத்தத்திலும், சரக்கு மற்றும் சேவை வரி (மாநிலங்களுக்கு ஈடு செய்தல்) சட்டம் 2017-லும் தெளிவாக உறுதியளிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு அளித்த வாக்குறுதி, ஓர் "இறையாண்மை மிக்க உத்தரவாதம்” (Sovereign guarantee) என்று நம்பியே மாநில அரசுகள் இந்த ஜி.எஸ்.டி. சட்டத்தை, தங்களது சட்டப்பேரவைகளிலும் நிறைவேற்றிச் செயல்படுத்தின. தமிழகச் சட்டப்பேரவையில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டபோது, அதில் உள்ள பாதகமான அம்சங்களை எடுத்துச் சொல்லி; “ஜி.எஸ்.டி. சட்டத்தை நிறைவேற்ற வேண்டாம். இதைத் தேர்வுக் குழுவிற்கு அனுப்புங்கள்” என்று கோரிக்கை வைத்தேன்.

ஆனால், அதைக் காதில் போட்டுக் கொள்ளாத அதிமுக அரசு, “இழப்பு ஈடு செய்யப்படும் என்று அரசியல் சட்ட உத்தரவாதம் பெற்று இருக்கிறோம்” என்று பெருமை பேசியது. அதையொட்டி, தமிழகச் சட்டப்பேரவையிலும் ஜி.எஸ்.டி. சட்டத்தை நிறைவேற்றியது.

ஜி.எஸ்.டி. சட்டம் செயல்படுத்தப்பட்டதால், மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பினை ஈடுசெய்ய வசூல் செய்யப்பட்ட “ஜி.எஸ்.டி இழப்பீட்டு வரி”-யை (GST Compensation Cess), அதற்கென உருவாக்கப்பட்ட “வருவாய் இழப்பினை ஈடு செய்யும் நிதியத்திற்கு” (GST Compensation Fund) அனுப்பாமல்; மத்திய அரசின் தொகுப்பு நிதியிலேயே (Consolidated Fund of India) வைத்துக் கொண்டு விட்டது மத்திய பாஜக அரசு. அதுமட்டுமின்றி, அந்த நிதியை, வேறு செலவுகளுக்கும் பயன்படுத்தியுள்ளது.

2017-18 ஆம் ஆண்டில் வசூல் செய்யப்பட்ட 62,612 கோடி ரூபாயில் 6,466 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு தன்னிடமே வைத்துக்கொண்டது. 2018-19 இல் வசூல் செய்த 95,081 ஆயிரம் கோடி ரூபாயில் 40 ஆயிரத்து 806 கோடி ரூபாயை தன்னிடமே வைத்துக்கொண்டது. இந்த இரண்டு ஆண்டுகளில் செய்யப்பட்ட வசூலையும் சேர்த்தால் வரும் ஜி.எஸ்.டி. இழப்பீட்டுத் தொகையான 47 ஆயிரத்து 272 கோடி ரூபாயை மத்திய அரசே பயன்படுத்திக் கொண்டுவிட்டது.

மத்திய அரசின் “இந்தியத் தொகுதி நிதியிலிருந்து” மாநிலங்களுக்கு அளிக்க வேண்டிய இந்தத் தொகையை, “ஜி.எஸ்.டி வருவாய் இழப்பை ஈடுசெய்யும் நிதியத்திற்கு” அனுப்பி, அங்கிருந்து மாநில அரசுகளுக்குப் பிரித்துக் கொடுக்க வேண்டும். ஆனால், அதைச் செய்ய மனமின்றி, மாநிலங்களை வஞ்சித்திடும் வகையில்,கொடுத்த வாக்குறுதியை மத்திய அரசே அப்பட்டமாக மீறியிருக்கிறது. அரசியல் சட்ட உத்தரவாதத்தையே காற்றில் பறக்கவிட்டுள்ளது மத்திய பாஜக அரசு.

மத்திய அரசின் சார்பில் அளிக்கப்படும் “இறையாண்மை மிக்க உத்தரவாதம்” போன்ற ஒரு வாக்குறுதியை; ஏதோ போகிற போக்கில் பேச்சு வாக்கில் சொல்லப்பட்டதைப் போலச் சாதாரணமாக நினைத்து, அதைப் புறக்கணித்து, அலட்சிய மனப்பான்மையுடன், அனைவரையும் எள்ளி நகையாடி இருக்கிறது.

கூட்டாட்சித் தத்துவத்தை நீர்த்துப் போகச் செய்து, மாநில நிதி உரிமையைப் பறிக்கும் இதை விட ஒரு மோசமான ஒரு செயலை - நிதி விதி மீறலை - இதற்கு முன் இருந்த எந்த மத்திய அரசாவது செய்திருக்குமா? என்றால், இருப்பதற்கு நிச்சயமாக வாய்ப்பில்லை!

“குதிரை குப்புறத் தள்ளியதுமில்லாமல், குழியும் பறித்துவிட்டது” என்பது போல்; மாநிலங்களுக்காக வசூல் செய்த பணத்தையே, வேறு செலவுகளுக்குப் பயன்படுத்திவிட்டு; “இந்தியத் தொகுதி நிதியிலிருந்து மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி இழப்பீடு கொடுக்க வேண்டியதில்லை” என்று நாட்டின் நிதியமைச்சராக இருக்கும் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்திலேயே தெரிவித்திருப்பது, மிகுந்த வேதனைக்குரியது.

மத்திய அரசு எடுத்துச் செலவு செய்த “ஜி.எஸ்.டி ஈடு செய்யும் நிதியில்” தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகையும் இருக்கிறது. 2017-18-ஆம் ஆண்டில் மட்டும் 4321 கோடி ரூபாய் நிலுவைத் தொகை இருக்கிறது. ஆனால் இந்த சி.ஏ.ஜி அறிக்கை குறித்து இன்றுவரை முதல்வர் பழனிசாமி கருத்து ஏதும் கூறவும் இல்லை.

மாநில நிதியை எடுத்தது தவறு என்று எதிர்ப்புத் தெரிவித்து, வழக்கம் போல நிதியமைச்சருக்கு ஒரு கடிதம் கூட எழுத முன்வரவில்லை. “ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்ளச் செல்கிறேன்” என்று அடிக்கடி டெல்லி சென்று வரும் அமைச்சர் ஜெயக்குமாரும் இதுகுறித்து இதுவரை வாய் திறக்கவில்லை.

தங்களின் ஊழல் வழக்குகளில் - வருமான வரித்துறை, சி.பி.ஐ. வளையத்திற்குள் மாட்டிக் கொண்டு விழிக்கும் நிலைமை ஏற்பட்டு விடக்கூடாது என்ற படபடப்புடன் முதல்வர் பழனிசாமி, மாநிலத்தின் உரிமைகளை இப்படி அடமானம் வைப்பது, அவர் வகிக்கும் பதவிக்குச் சற்றும் பொருத்தமானதல்ல.

தமிழக முதல்வர்கள் வரலாற்றில்; நெஞ்சை நிமிர்த்தி, தட்டிக் கேட்க வேண்டிய உரிமைகள் உள்ள காரியங்களில் கூட, அதை ஏனோ தவிர்த்துவிட்டு, “ ஒரு முதல்வர், நெளிந்து வளைந்து கொண்டு இருந்தார்” என்று நாளைய தலைமுறை இழித்துப் பழித்துப் பேசும் அளவிற்கு, பழனிசாமி நடந்து கொள்ளாமல், இப்போதாவது உடனடியாக மத்திய அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழகத்திற்கு வர வேண்டிய ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகையைப் பெற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறேன்.

இது மத்திய பாஜக அரசுக்குச் செய்யும் சலுகை அல்ல, மாநிலத்தின் நலனுக்காக நிலை நாட்ட வேண்டிய உரிமை''.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x