ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் தீர்த்தங்களில் நீராட அனுமதிக்கக் கோரி திமுக கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் தீர்த்தங்களில் நீராட அனுமதிக்கக் கோரி திமுக கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Updated on
1 min read

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்குள் அமைந்துள்ள 22 தீர்த்தங்களில் புனித நீராட அனுமதி வழங்கிடக் கோரி தி.மு.க., கூட்டணி கட்சியினர் சார்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கரோனா வைரஸ் பரவல் ஊரடங்கினால் ராமேசுவரம் ரராமநாதசுவாமி கோயில் கடந்த மார்ச் 24 முதல் மூடப்பட்டு பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தமிழக அரசு அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பக்தர்கள் செப்டம்பர் 01 முதல் தரிசிக்கலாம் என அனுமதி அளித்ததைத் தொடர்ந்து கடந்த 1-ம் தேதியிலிருந்து பக்தர்களின் உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்த பிறகு ராமேசுவரம் கோயிலில் ராமநாதசுவாமி மற்றும் பர்வத வர்த்தினி அம்பாள் சன்னதிகளுக்கு மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

மற்ற சன்னதிகளில் பக்தர்கள் செல்ல அனுமதி இல்லை. அதுபோல கோயிலுக்கு வரும் பக்தர்கள் தேங்காய்ப்பழத் தட்டு போன்ற எந்த பூஜை பொருட்களையும் கொண்டு வருவதற்கு அனுமதி கிடையாது.

மேலும் ராமநாதசுவாமி கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடுவதற்கு பக்தர்களுக்கு தற்காலிகமாக அனுமதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திமுக கூட்டணி கட்சியினர் சார்பில் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் தீர்த்தங்களில் நீராட அனுமதிக்கக் கோரி ராமநாதசுவாமி கோயில் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு திமுக நகரச் செயலாளர் நாசர் கான் தலைமை தாங்கினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ராமநாதசுவாமி கோயிலின் நான்கு கோபுர வாசல் வழியாகவும் பக்தர்களை அனுமதிக்க வேண்டும், அக்னிதீர்த்த கடற்கரையில் புரோகிதர்கள் புரோகிதம் செய்ய அனுமதிக்கவேண்டும், தனுஷ்கோடி வரை பக்தர்கள்,சுற்றுலா பயணிகளை செல்ல அனுமதிக்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in