சாத்தான்குளம் இரட்டை கொலையில் காவல் ஆய்வாளர் உட்பட 9 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் 

சாத்தான்குளம் இரட்டை கொலையில் காவல் ஆய்வாளர் உட்பட 9 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் 
Updated on
1 min read

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் இருவரும் போலீஸாரால் கொல்லப்பட்ட வழக்கில் காவல் ஆய்வாளர் உட்பட 9 பேர் மதுரை நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவர் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸாரால் அடித்துக் கொலை செய்யப்பட்டனர்.

இந்தக்கொலை தொடர்பாக அப்போதைய சாத்தான்குளம் காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், 2 சார்பு ஆய்வாளர்கள், ஒரு சிறப்பு சார்பு ஆய்வாளர், 2 தலைமை காவலர், 4 காவலர்கள் மீது சிபிஐ போலீஸார் ஜூலை 7-ல் இரு வழக்குகளை பதிவு செய்தனர்.

சிபிஐ விசாரணையில் தந்தை, மகன் இருவரையும் சாத்தான்குளம் போலீஸார் ஜூன் 19-ல் கைது செய்து சாத்தான்குளம் காவல் நிலையம் அழைத்துச் சென்று தாக்கியதும், அதில் இருவரும் பலத்த காயமடைந்ததும். பின்னர் இருவருக்கும் சிகிச்சை அளிக்காமல் கோவில்பட்டி கிளை சிறையில் அடைத்ததும், அங்கு இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து ஸ்ரீதர் உட்பட 10 பேரையும் சிபிஐ கைது செய்தது. இவர்களில் சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரை உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். ஸ்ரீதர் உட்பட 9 பேரும் தற்போது மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு மதுரையில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது.

இந்த இரு வழக்கிலும் ஒருங்கிணைந்த குற்றப்பத்திரிகையை சிபிஐ மதுரை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் கே. பாலகிருஷ்ணன்,ரகு கணேஷ், தலைமைக் காவலர்கள் எஸ்.முருகன், ஏ. சாமதுரை, காவலர்கள் எம். முத்துராஜா, எஸ். செல்லத்துரை, எக்ஸ். தாமஸ் பிரான்சிஸ், எஸ். வெயிலுமுத்து ஆகியோர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

இந்த வழக்கில் தொடர்புடைய பிற நபர்களின் தொடர்பு குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருதாக சிபிஐ தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in