Last Updated : 26 Sep, 2020 06:19 PM

 

Published : 26 Sep 2020 06:19 PM
Last Updated : 26 Sep 2020 06:19 PM

கொரிய புத்தர் கோயில்கள் அய்யனார் கோயில்கள் போலவே உள்ளன: கொரிய ஆய்வாளர் தகவல்

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை மற்றும் கொரியத் தமிழ்ச் சங்கம் இணைந்து 'கொரியத் தமிழரும் தமிழும்' என்னும் இணையவழி ஆய்வரங்கத்தை 5 நாட்கள் நடத்தின. நிகழ்ச்சியின் இறுதி நாளான இன்று 'கொரிய- தமிழக மரபு மற்றும் தற்கால விழாக்கள்: ஒரு ஒப்பீட்டு பார்வை' என்ற தலைப்பில், கொரிய தமிழ்ச் சங்கத்தின் கொள்கை மற்றும் வழிமுறை வகுப்புக் குழுத் தலைவர் முனைவர் அந்தோணி ஆனந்த் உரையாற்றினார்.

அப்போது தமிழகத்தின் பொங்கல் திருவிழாவைப் போலவே, கொரியாவிலும் அறுவடைத் திருநாள் நடைபெறுவதையும், இங்கு குலதெய்வ வழிபாடு இருப்பதைப் போலவே அங்கே முன்னோர் வழிபாடு இருப்பதையும் பற்றி அவர் எடுத்துரைத்தார்.

"பொங்கலை ஒட்டிக் காணும் பொங்கல் விழாவை நாம் கொண்டாடுவதைப் போலவே கொரிய மக்கள், உறவினர்களின் வீடுகளுக்குச் சென்று இனிப்பு கொடுத்துக் கொண்டாடுகிறார்கள். சோம்ங்யோ என்ற அந்த விழாவின்போது, எப்படி நம்மூரில் குறிப்பிட்ட தினங்களில் மூதாதையரின் கல்லறை, நினைவு கல் போன்றவற்றை சுத்தம் செய்து வழிபடுகிறோமோ, அதைப்போலவே அவர்களும் கல்லறைக்குச் சென்று புற்களை அகற்றி வழிபாடு நடத்துகிறார்கள்" என்றார்.

முன்னதாக, 'கொரியாவில் அதிகரிக்கும் தமிழ் ஆர்வம்' என்ற தலைப்பில், கொரியத் தமிழ்ச் சங்கத்தின் ஆளுமைப் பிரிவின் இணைச்செயலர் முனைவர் செ.ஆரோக்கியராஜ் உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:

''நான் வேலைக்காக கொரியா வந்து 8 ஆண்டுகள் ஆகின்றன. பேராசிரியராகப் பணிபுரிந்தாலும், கொரியாவின் கிராமப் புறங்களைப் பார்ப்பதில் ஆர்வம் காட்டினேன். கொரியா பேராசிரியரும் எனக்கு உதவி செய்தார். அப்போதுதான் கொரிய மொழியில் தமிழ் கலந்திருப்பதையும், தமிழர்களின் பழக்கவழக்கங்கள், பண்பாடுகள், கலாச்சாரம் ஆகியவற்றின் மிச்சங்கள் கொரியர்களின் வாழ்க்கையில் கடைப்பிடிக்கப்படுவதையும் காண முடிந்தது.

ஏற்கெனவே, கொரியா - தமிழக உறவுகள் குறித்து முனைவர் நா.கண்ணன், ஒரிசா பாலு ஆகியோர் சில காணொலிகளை வெளியிட்டிருக்கிறார்கள். இங்கேயும் ஜீ மூன் யாங் என்ற கொரியப் பேராசிரியரும் மொழி ஒற்றுமை குறித்து வீடியோக்களை வெளியிட்டிருக்கிறார். ஆனால், இந்த ஒற்றுமைகளை யாரிடம் கொண்டு சேர்க்க வேண்டுமோ அவர்களுக்குச் சேர்க்கவில்லை என்று நான் நினைத்தேன். எனவேதான் கொரிய மக்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு இந்தத் தகவல்கள் சென்று சேர்வதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்தேன்.

லஸோல் (Lasol) என்ற கொரிய யூடியூபரை இணைத்து என்னிடமிருந்த தரவுகளைக் கொண்டு, கொரிய- தமிழ் மொழி ஒற்றுமை குறித்தும் உணவுப் பழக்கங்கள் குறித்தும் ஆதாரத்தோடு ஒரு வீடியோ தயாரித்து வெளியிட்டேன். அந்த வீடியோ கொரியாவில் 35 லட்சம் பார்வையாளர்களைச் சென்று சேர்ந்தது. இதுவரை கொரியாவில் எந்த அந்நிய மொழி சார்ந்த வீடியோவும் இதுபோல ஒரு வரவேற்பைப் பெற்றதில்லை. அந்த வீடியோவுக்குப் பிறகு கொரியா -தமிழ் மொழி உறவுகளை அறியும் ஆர்வம் கொரியாவில் அதிகரித்துள்ளது. நிறைய வீடியோக்களும் வெளிவரத் தொடங்கி இருக்கின்றன.

அந்த வீடியோவில், தமிழ் வார்த்தை ஒற்றுமைகளையும், உணவு வகைகளில் உள்ள ஒற்றுமையையும் வீடியோவில் விளக்கினேன். அதுமட்டுமின்றி, தமிழகத்தில் புழக்கத்தில் உள்ள கிராமப்புற விளையாட்டுகளையும் எடுத்துக் காட்டினேன். அம்மா, அப்பா, அண்ணி போன்ற உறவு முறை வார்த்தைகளையும், கொழுக்கட்டை, எள்ளுருண்டை, பொங்கல் போன்ற உணவுகளையும் கொரிய இளைஞர்களுக்கு அறிமுகப்படுத்தினோம். தமிழகத்தில் நடைமுறையில் உள்ள கலாச்சார, பழக்க வழக்கங்கள் சிலவற்றை ஆதாரத்துடன் சொன்னேன்.

நோய்த் தடுப்பு நடவடிக்கையாக நாம் வேப்பிலைத் தோரணம் கட்டுவதைப் போல, கொரியாவிலும் தோரணம் கட்டுகிறார்கள். விவசாயம் சார்ந்த தமிழ் வார்த்தைகளும் கொரிய மொழியில் ஏராளமாகக் கலந்திருக்கின்றன. உடல் பாகங்கள் பலவற்றுக்கு அப்படியே தமிழ் வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன. கொரியர்களின் வாழ்க்கையில் அரிசி உணவுக்கு இன்னும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஒரு குழந்தை பிறக்கும்போதும் சரி, ஒருவர் இறக்கும்போதும் சரி, புதுமனை புகுவிழா சமயத்திலும் சரி அதிரசம் உள்ளிட்ட அரிசியால் செய்யப்பட்ட இனிப்பு வகைகளைப் பரிமாறுகிறார்கள்.

இறப்பு வீட்டில் கறி, மீன் போன்றவற்றைப் படைக்கிறார்கள். அரிசி சார்ந்த உணவுகளையும், அந்தப் பகுதியில் விளையும் பழங்களையும் படைக்கிறார்கள். எந்த ஒரு காரியத்துக்கும் நாம் ஆடுகளைப் பலி கொடுப்பதைப் போலவே, கொரியர்கள் பன்றியைப் பலிகொடுக்கிறார்கள். அப்போது பன்றியின் கழுத்தில் மாலை போடுகிறார்கள். இங்குள்ள கிராமப்புற புத்தர் கோயில், கிட்டத்தட்ட நம் ஊர் அய்யனார் கோயிலைப் போல இருக்கிறது. புத்தரே அப்படியான தோற்றத்துடன் உருவாக்கப்பட்டிருக்கிறார். புத்தருக்கு இங்கே சாக்கிய முனி என்றே அடைமொழி கொடுத்திருக்கின்றனர்.

ஆதிச்சநல்லூரில் நடந்த அகழ்வாராய்ச்சியில் வெளிநாட்டினர் தங்கியிருந்ததற்கு ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன என்று ஆஸ்திரேலிய ஆய்வறிஞர் ராகவன் கூறியிருக்கிறார். அங்கு கிடைத்த நூற்றுக்கு மேற்பட்ட மனித எலும்புக் கூடுகளில் சீனா, கொரியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள் என்பது உறுதியாகி இருக்கிறது. சமீபகாலமாகத்தான் கொரிய- தமிழக உறவுகள் பேசுபொருளாகி இருக்கின்றன. தமிழ் ராணி ஒருவர் கொரியாவை ஆட்சி செய்திருக்கிறார் என்றால், அதற்கு முன்பே இரு நாடுகளுக்கும் இடையே வணிகம் நடந்திருக்க வேண்டும். அந்தத் தொடர்பில்தான் கொரிய மன்னருக்கு தமிழச்சி ஒருவரை மணமுடித்துக் கொடுத்திருக்க வேண்டும்.

கொரியா தமிழ்ச் சங்கம் இந்த இரு நாடுகளின் தொடர்புகள் குறித்து பல முன்னெடுப்புகளைச் செய்திருக்கிறது. தமிழ் மற்றும் கொரிய மொழிகளுக்கு இடையிலான ஒற்றுமைகளை மேலும் வெளிக்கொணர தமிழ்நாடு அரசு ஓர் ஆராய்ச்சி மையத்தை நிறுவவேண்டும். இந்திய, தமிழகப் பல்கலைக்கழகங்களில் கொரிய மொழியை இணைப்பது, கொரியா பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பது போன்ற கோரிக்கைகளையும் இந்நிகழ்வின் மூலம் வலியுறுத்த விரும்புகிறேன்".

இவ்வாறு ஆரோக்கியராஜ் பேசினார்.

அவருடைய உரையை பாராட்டிப் பேசிய உலகத் தமிழ்ச் சங்க இயக்குனர் அன்புச்செழியன், "இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற நாங்களும் அரசுக்குப் பரிந்துரைக்கிறோம்" என்று உறுதியளித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x