

தனக்குக் கொடுத்த கலைத் திறமைகளை நல்ல முறையில் பயன்படுத்தி புகழின் உச்சத்தை அடைந்த எஸ்பிபி, சமயங்களையும் கடந்த எண்ணற்ற கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய பக்திப் பாடல்களைப் பாடி கலைவழி இறைமொழியை அனைவருக்கும் அறிவித்தவர் என மயிலை மறை மாவட்டப் பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
எஸ்பிபி மறைவுக்கு அவர் வெளியிட்ட இரங்கல் செய்தி:
“பாடும் நிலா பாலு என்று அழைக்கப்படும் மாபெரும் புகழுக்குரிய பல்கலை வித்தகர் இந்தியத் திரை இசைப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவுச் செய்தி அவரது குடும்பத்தாருக்கும், கலை உலகத்தினருக்கும், ரசிகப் பெருமக்களுக்கும் மட்டுமல்ல இம்மாமனிதரைப் பற்றி அறிந்த ஒவ்வொருவருக்குமே ஈடுசெய்யமுடியாத சோகத்தையும் துயரத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
கரோனா தொற்றுநோய்க்காக சிகிச்சை பெற்றுவந்த எஸ்பிபி தனது 74-வது வயதில் நம்மைவிட்டுப் பிரிந்துவிட்டார் என்று எண்ணும்போது ஒரு நல்ல மனிதரை இழந்துவிட்டோம் எனக் கருதுகிறேன். இறைவன் தனக்குக் கொடுத்த கலைத் திறமைகளை நல்ல முறையில் பயன்படுத்தி புகழின் உச்சத்தை அடைந்த எஸ்பிபி சமயங்களையும் கடந்த எண்ணற்ற கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய பக்திப் பாடல்களைப் பாடி கலைவழி இறைமொழியை அனைவருக்கும் அறிவித்தவர்.
ஸ்வரங்களின் சுகமான ராகத்தில் மனிதநேய மதிப்புகளை நம் உள்ளங்களில் விதைத்தவர். 40,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி என்றும் ஓயாது நம் செவிகளில் ஒலித்துக் கொண்டிருப்பவர். அவர் படைத்துள்ள சாதனைகள் காலத்தால் அழியாதவை.
துயரமான நேரத்தில் அன்னாரை இழந்து தவிக்கின்ற அவரது மனைவி, மகள், மகன் மற்றும் குடும்பத்தாருக்கும் கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கும், ரசிகப் பெருமக்களுக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் சென்னை-மயிலை உயர் மறை மாவட்டத்தின் சார்பாக என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களையும், ஜெபங்களையும் உரித்தாக்கிக் கொள்கிறேன்.
எஸ் பி பாலசுப்ரமணியம் ஆன்மா இறைவனில் நிறைவான இளைப்பாறுதல் அடைவதாக”.
இவ்வாறு சென்னை மயிலை மறை மாவட்டப் பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி தெரிவித்துள்ளார்.